Skip to main content

சூடுபிடிக்கும் தேர்தல் களம்; தீடீரென வேட்பாளராக மாறிய முன்னாள் ராணுவ வீரர்!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
 ex-serviceman who has filed his nomination to contest the parliamentary elections

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பகுதியைச் சேர்ந்தவர் மதுரை விநாயகம். இவர் கடந்த 20 வருடங்களாக இந்திய ராணுவத்தில் ஜாயின் கமிஷன் அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். அதன் பின்னர், கடந்த 2016 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார். எல்லையில் பாதுகாப்பு பணியில் முழு நேரமும் ஈடுபட்டு வந்த இவர், சொந்த ஊருக்கு வந்ததும் குடும்பத்தினரோடு அமைதியாக வசித்து வந்துள்ளார். மேலும், நடப்பு அரசியலை கூர்மையாக கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி துவங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதனையொட்டி, வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தல் ஆணையத்திடம் இருந்து இந்த அறிவிப்பு வெளியானதும், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்திற்கு தேர்தல் அதிகாரியாக அந்த மாவட்டத்தின் ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, கோவை மாவட்டத்தில் தேர்தலில் களம் காண்பவர்கள் அவரிடம் வந்து வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், திடீரென எந்தவித திட்டமிடலும் இல்லாமல் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான மதுரை விநாயகம், ராணுவ சீருடையை அணிந்துகொண்டு, தனது குடும்பத்தாரோடு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு சென்றவர், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட போவதாகக் கூறியுள்ளார். இதற்கான வேட்பு மனுவை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொள்ளாச்சி நாடாளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலரான சர்மிளாவிடம் கொடுத்துள்ளார்.

முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் சீருடையோடு வேட்பு மனு கொடுக்க வந்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மதுரை விநாயகம் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது, தான் கடந்த 20 ஆண்டுகளாக இந்திய நாட்டு எல்லையை பாதுகாத்து வந்ததாகவும், தற்போது ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகவும் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், நான் சம்பாதிப்பதற்காக இந்தத் தேர்தலில் பேட்டியிடவில்லை. முழுக்க முழுக்க மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே தேர்தலில் போட்டியிடுகிறேன் எனவும், இதற்காகவே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன் எனவும் கூறியிருக்கிறார்.

அப்போது, அங்கிருந்த செய்தியாளர்கள், இங்கு ஏற்கெனவே நிறைய அரசியல்வாதிகள் இருக்கும் போது நீங்கள் வந்து என்ன செய்ய போகின்றீர்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த மதுரை விநாயகம், இங்கு உள்ளவர்களை மூன்று முறை எம்பி ஆக்கினாலும் அல்லது சட்டமன்ற உறுப்பினர்கள் ஆக்கினாலும் சம்பளத்தையும் மூன்று ஓய்வூதியத்தையும் வாங்கிக்கொள்கிறார்கள் எனவும், இதனால் மக்களின் வரிப்பணம் முழுவதும் அவர்களிடம் சென்று விடுவதாகவும் கூறியிருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய மதுரை விநாயகம், நான் வெற்றி பெற்றால் எனது தொகுதி மக்களுக்கு வீட்டு வரி, குடிநீர் வரி, சொத்து வரி, உள்ளிட்டவற்றை வசூலிக்க மாட்டேன் எனத் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், பொள்ளாச்சி தொகுதியில் தென்னை விவசாயிகளின் வளர்ச்சிக்கான பணிகளை செய்வேன் எனவும், நீர்நிலைத் திட்டங்களை சரி செய்வேன் எனவும் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு, பொள்ளாச்சியில் போட்டியிட போவதாக கூறி சவப்பெட்டியோடு ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மறுபடியும் அதே பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட போவதாக முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் சீருடையோடு வந்து வேட்புமனு தாக்கல் செய்ததால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தாய் கண்முன்னே மகனுக்கு நேர்ந்த துயரம்; நொடிப் பொழுதில் நடந்த சம்பவம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Son passed away in front of mother eyes

கோவை மாவட்டம், சாய்பாபா காலனி அருகே அமைந்துள்ளது கருப்புசாமி வீதி. இப்பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். இவரது மகன் ஆனந்த். இளைஞரான இவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். அதனால், மிகுந்த கவனமுடன் குடும்பத்தினர் ஆனந்தை அரவணைப்புடன் வளர்த்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், ஆனந்திற்கு உயர் ரத்த அழுத்த பிரச்சனை  ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் அவருக்கு மருத்துவ மனையில் சிகிச்சை பெற முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, கடந்த 21ஆம் தேதி இரவு ஆனந்தின் தாய் லட்சுமி மற்றும் பாட்டி சியாமளா இணைந்து ஆனந்தை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். முன்னதாக பேருந்துக்காக கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி கங்கா மருத்துவமனை பேருந்து நிறுத்தத்திற்கு அருகே சாலையின் ஓரத்தில் நடந்துச் சென்றுள்ளனர். அப்போது, ஆனந்த் தாய் மற்றும் பாட்டியின் கையை விட்டு நடந்து சென்றுள்ளார். குடும்பத்தினரும் ஆனந்த் சரியாக நடந்துச் செல்வார் என்ற நம்பிக்கையுடன் கூடவே நடந்துச் சென்ற நிலையில், திடீரென ஆனந்த் அவ்வழியே வந்த துடியலூரில் இருந்து போத்தனூர் நோக்கி சென்ற பேருந்தின் முன்பாக பாய்ந்துள்ளார்.

நொடிப் பொழிதில், ஆனந்த் பேருந்து முன் பாய தாய் மற்றும் பாட்டியின் கண் முன்னே  தனியார் பேருந்தின் முன் பகுதியில் சிக்கியுள்ளார். இதில், பேருந்தின் முன் சக்கரம் தலையில் ஏறியதில் ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மகன் தடுமாறி விழுந்து கண்முன்னே உயிரிழந்ததைப் பார்த்த தாய்  லட்சுமி நடுரோட்டில் கதறி அழுதது காண்போரை கண் கலங்க செய்தது.

இதையடுத்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.  தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கோவை மேற்கு சரக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்தில் உயிரழந்தவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் கோவை மேற்கு சரக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, விபத்து நடந்த அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், உடல் நிலை சரியில்லாத ஆனந்தை அவரது தாய் மற்றும் பாட்டி சாலையின் ஓரத்தில் நடந்து கூட்டிச் செல்கின்றனர். அப்போது, திடீரென் அவ்வழியாக தனியார் பேருந்து வந்துள்ளது. அதில், திடீரென ஆனந்த் பாய்கிறது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஆனால், தனியார் பேருந்து ஓட்டுநர் சுதாரித்துக் கொண்டு வண்டியை திருப்பி பிரேக் அடித்துள்ளார். ஆனாலும், யாரும் எதிர்பாராத வகையில் தனியார் பேருந்தின் முன் சக்கரம் ஏறியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவிற்கு சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்யும் நெட்டிசன்கள் மகனை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் உடல் நிலை சரியில்லாத இளைஞர் ஒருவர் தனியார் பேருந்து முன்பு பாய்ந்து விபத்தில் சிக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தாயின் கண்முன்னே விபத்தில் சிக்கி மகன் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது