Skip to main content

நிறுத்தப்பட்ட பேருந்தை இயக்க வேண்டும் - பொதுமக்கள், முன்னாள் எம்.எல்.ஏ ஆர்ப்பாட்டம்

Published on 20/12/2023 | Edited on 20/12/2023
Ex-MLA struggle  to start the bus stopped near Tiruvannamalai

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் பேரூராட்சியை சுற்றி நூற்றுக்கணக்கான கிராமங்கள் உள்ளன. ஆணைபோகி கிராம ஊராட்சிக்கு உட்பட்டது மேல்செம்பேடு கிராமம். இங்கு 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் வழியே வந்தவாசியில் இருந்து செப்டாங்குளம் என்கிற ஊருக்கு அரசு டவுன் பஸ் தடம் எண் 4 சென்று வந்தது. பல மாதங்களுக்கு முன்பு இந்த சாலை சரியில்லை என தடம் எண் 4ல் சென்ற பேருந்து நிறுத்தப்பட்டது.

இதனால் மேல்செம்பேடு கிராம மக்கள் ஆரணி, பெரணமல்லூர், வந்தவாசி செல்வதற்காகத் தங்களது கிராமத்திலிருந்து 2 கி.மீ தூரம் நடந்து ஆரணி டூ வந்தவாசி சாலைக்கு வந்து பேருந்து ஏறிக்கொண்டு இருக்கின்றனர். இக்கிராமத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி பிள்ளைகளும் தினமும் நடந்து வந்து பேருந்து ஏறிச் செல்கின்றனர். அதேபோல் இறங்கி நடந்து செல்கின்றனர்.

இந்த சாலையை சீர் செய்யச்சொல்லி மக்கள் பிரதிநிதிகளிடம் மக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் புதிய சாலை அமைக்கப்பட்டது. சாலை அமைத்து சில மாதங்கள் முடிந்தும் இந்த தடத்தில் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்தை அதிகாரிகள் இயக்கவில்லையாம். புதிய தார் சாலை போடப்பட்டுவிட்டது அதனால் பேருந்தை இயக்குங்கள் என வந்தவாசி போக்குவரத்து பணிமனை அதிகாரிகளிடம் மக்கள் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளார்கள், அதனை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லையாம்.

இந்நிலையில், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஏ.கே.எஸ். அன்பழகன் தலைமையில் அக்கிராம மக்கள் 100 பேர், டிசம்பர் 19 ஆம் தேதி திடீரென வந்தவாசி – ஆரணி சாலையில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளைக் கண்டித்து முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் பொதுமக்கள் கோஷங்கள் எழுப்பினர். பேருந்து வராததால் பொதுமக்கள் தாங்கள் படும் சிரமங்களை வெளிப்படுத்தினர்.

சாலை சரியில்லை எனச் சொல்லி பேருந்தை நிறுத்தினார்கள் அதிகாரிகள். இப்போது புதிய தார் சாலை அமைக்கப்பட்டுவிட்டது. ஆனால் அதிகாரிகள் பேருந்தை இயக்க மறுக்கிறார்கள். ஏற்கனவே இயக்கப்பட்ட ரூட்டில்தான் மீண்டும் பேருந்து இயக்கச் சொல்லிக் கேட்கிறோம். ஏதோ புதிய ரூட், புது பேருந்து கேட்டது போல் செய்ய மறுக்கிறார்கள் எனக் கவலையுடன் பேசினர் மக்கள்.

சார்ந்த செய்திகள்