/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_3698.jpg)
ஜெயலலிதாவின் மறைவையடுத்து ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வந்த நிலையில் அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான பிரச்சனை பூதாகரமாக வெடிக்கத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும் பிரிந்தது. அதன் பிறகு பொதுக்குழு கூட்டப்பட்டு அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், சிவகங்கையில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா மற்றும் கட்சியின் பொதுக்குழு கூட்டம் கடந்த 11ம் தேதி மாலை நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் மதுரை வந்தார். அப்போது சிங்கப்பூரில் வேலை பார்த்து விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த அமமுக கட்சித்தொண்டர் ராஜேஸ்வரன், பழனிசாமி சென்ற அதே விமானத்தில் பயணம் செய்தார். பழனிசாமியை பார்த்து கோபமடைந்த அமமுக கட்சியின் தொண்டர் ராஜேஸ்வரன், எடப்பாடிக்கு எதிராக முழக்கமிட்டு வீடியோ பதிவு செய்தார். இதனைக் கண்ட பழனிசாமியின் பாதுகாவலர் ராஜேஸ்வரனிடம் இருந்து அவரது செல்போனை பறித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_1314.jpg)
அந்த வீடியோவில் அவர் பேசும்போது, “எல்லோரும் பார்த்துக் கொள்ளுங்கள். நம்முடன் போய்க்கொண்டு இருப்பது எதிர்க்கட்சித் தலைவர், துரோகத்தின் அடையாளம் எடப்பாடியாருடன் நான் பயணித்துக் கொண்டு உள்ளேன். அண்ணன் எடப்பாடியார் துரோகத்தின் அடையாளம்; சசிகலாவிற்கு துரோகத்தை பண்ணியவர். 10.5% இடஒதுக்கீட்டை தென்னாட்டு மக்களுக்கு எதிராகக் கொடுத்தவர்” என்றார். அமமுக தொண்டர் பழனிசாமிக்கு எதிராக வீடியோ எடுத்து பேசிய தகவல் அதிமுகவினருக்கு தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து விமான நிலையத்தை விட்டு வெளியில் வந்த ராஜேஸ்வரனை அதிமுகவினர் சரமாரியாகத் தாக்கினர். இந்நிலையில் பழனிசாமிக்கு எதிராக பேசியவர் குறித்து விசாரித்த போது அவர் அமமுகவின் வெளிநாடுவாழ் மக்கள் தொடர்பு பிரிவின் சிவகங்கை மாவட்டச் செயலாளராக உள்ளார் என்பது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து ராஜேஸ்வரன் மீது முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் போலீஸில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், போலீஸார் ராஜேஸ்வரன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.அதேபோல், ராஜேஸ்வரன் அளித்த புகாரின் அடிப்படையில், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட ஆறு பேர் மீது நேற்று போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_3745.jpg)
இந்நிலையில், நேற்று மதுரையில் நடந்த அதிமுக கட்சிக் கூட்டத்தில் மதுரை விமான நிலைய சம்பவம் குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, “ஒரு முன்னாள் முதலமைச்சர், மக்களால் மதிக்கக்கூடிய தலைவரை, ஒருமையில் ஒருவர் பேசுகிறார். (செல்லூர் ராஜுவும் மேடையில் அந்த நபரை ஒருமையில் பேசினார்) அவர் சுயநினைவோடு இல்லை. மது அருந்தியிருக்கிறார். சிங்கப்பூரிலிருந்து வரும் அவர் முந்தைய நாள் மது அருந்தியுள்ளார். பிறகு விமானத்தில் வந்தபோது போதை தெளிந்து மீண்டும் மது அருந்தினாரா என்ன என்பது தெரியவில்லை. அரை போதையில் இருந்துள்ளார். அரை போதையில் விமான நிலைய பேருந்தில் கம்பியைப் பிடித்துக்கொண்டு, பேசக் கூடாத வார்த்தையைப் பேசுகிறார். அண்ணனுடைய (இ.பி.எஸ்.) பெயரைச் சொல்லி பேசுகிறார். துரோகி என்று பேசுகிறார். திரும்பத்திரும்பப் பேசுகிறார். யாராக இருந்தாலும்.. ஏன் காந்தியாக இருந்தாலும் அடித்திருப்பார். காந்தியை காட்டிலும் பொறுமைகாத்தவர் எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி” என்று பேசியுள்ளார்.
Follow Us