/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/puthuvai-kannan.jpg)
புதுவையில் முக்கிய அரசியல் தலைவராக திகழ்ந்தவர் ப.கண்ணன் (74). இவர் பேரவைத் தலைவர், அமைச்சர், மாநிலங்களவை எம்.பி. என பல்வேறு பொறுப்புகளில் பதவி வகித்துள்ளார். இதையடுத்து, அதிமுக - பா.ஜ.க கூட்டணியில் இணைந்து செயல்பட்ட இவர் கடந்த 2021ஆம் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அரசியலில் இருந்து முற்றிலுமாக விலகினார்.
முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் ரத்த அழுத்த குறைவு மற்றும் சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் மூலக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில், நுரையீரல் தொற்று இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று (05.11.2023) இரவு காலமானார். முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் மறைவையடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும்இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், புதுவை முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “புதுவை மாநில முன்னாள் சட்டப்பேரவைத் தலைவரும் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் எனப் பல்வேறு பொறுப்புகளில் மக்களுக்காகப் பணியாற்றியவருமான புதுவை கண்ணன் உடல்நலக்குறைவால் மறைந்தார் என்றறிந்து மிகவும் வருந்துகிறேன்.
காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக இளவயது முதல் பணியாற்றிய கண்ணன், கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு புதுவை மக்களிடையே பெரிதும் பிரபலமும் செல்வாக்கும் நன்மதிப்பும் கொண்ட தலைவராகத் திகழ்ந்து வந்தவர் ஆவார். அவரது மறைவு புதுவை அரசியலில் எளிதில் ஈடுசெய்ய இயலாத இழப்பு ஆகும். அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், அரசியல் உலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)