ADVERTISEMENT

தப்ப முயன்ற முன்னாள் ஆய்வாளர்; மடக்கிப் பிடித்த போலீஸ் 

09:00 AM Apr 01, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், நாகமலை காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்தவர் வசந்தி. சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்தவர் அர்ஷத். இவர் பேக் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். அர்ஷத், தனது தொழில் சம்பந்தமாக ரூ. 10 லட்சத்துடன் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் புதுக்கோட்டை நாகமலை பகுதிக்கு வந்தார். அப்போது, வசந்தி தனது கூட்டாளிகளான பால்பாண்டி, பாண்டியராஜன், உக்கிரபாண்டி, சீமைக்காசி ஆகிய நான்கு பேருடன் அர்ஷத்தை வழிமறித்து சோதனை எனச் சொல்லி அவர் வைத்திருந்த ரூ. 10 லட்சத்தை பறிமுதல் செய்தார்.

அதனைத் தொடர்ந்து அர்ஷத், நாகமலை காவல்நிலையத்திற்குச் சென்று ஆவணங்களை காட்டி, தனது பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் வசந்தி, பொய் வழக்கு போட்டு சிறையில் அடைப்பேன் என அர்ஷத்தை மிரட்டியுள்ளார். இதனால் அர்ஷத், மதுரை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தார். அர்ஷத் கொடுத்த புகாரின் அடிப்படையில் வசந்தி உள்ளிட்ட அவரது கூட்டாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

வழக்குப் பதிவானதை அறிந்த வசந்தி உடனே தலைமறைவானார். இந்த வழக்கில் வசந்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து வசந்தியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸ் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. இதில் வசந்தி, கோத்தகிரி பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருப்பதைக் கண்டறிந்து அங்கு சென்ற தனிப்படையினர் அவரை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து வசந்தி, ஜாமீன் பெற்று வழக்கை சந்தித்து வந்தார்.

ஜாமீன் பெற்ற வசந்தி வழக்கின் புகார்தாரர்களை மிரட்டி சாட்சிகளை கலைக்க முயற்சி செய்தார். இதன் காரணமாக, மிரட்டலுக்குள்ளான நபர் மதுரை மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அவர் அளித்தப் புகாரின் அடிப்படையில், சாட்சிகளை கலைத்தல் எனும் பிரிவின் கீழ் வசந்தி மீது தனியாக ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து வசந்தியை கைது செய்ய, தென் மண்டல ஐ.ஜி. அஸ்ராக் கார்க் ஆலோசனையின் பேரில், ஸ்ரீவில்லிப்புத்தூர் டி.எஸ்.பி. சபரிநாதன் தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது.

டி.எஸ்.பி. சபரிநாதன் தலைமையிலான தனிப்படையினர் நேற்று காலை மதுரை ஊமச்சிகுளம் பகுதியிலுள்ள வசந்தியின் வீட்டுக்குச் சென்றனர். அப்போது வசந்தி அவர்களிடமிருந்து தப்பித்து வெளியே செல்ல முயன்றார். உடனடியாக போலீஸார், அவரை சுற்றி வளைத்தனர். இருப்பினும், அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது, பெண் காவல்துறை அதிகாரிகள் குண்டுக் கட்டாகத் தூக்கியும், இழுத்துச் சென்றும் வசந்தியை கைது செய்து வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT