தமிழக முன்னாள் ஆளுநர் மறைவு; முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

Ex-governor of Tamil Nadu passed away; Obituary of Chief Minister M. K. Stalin

உச்சநீதிமன்ற நீதிபதி, தமிழக ஆளுநர் போன்ற பதவிகளை வகித்தவர் பாத்திமா பீவி. இவருக்கு வயது 96. உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக கேரள மாநிலம் கொல்லம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பாத்திமா பீவி காலமானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காலமான பாத்திமா பீவி உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி என்ற பெருமையையும், முதல் இஸ்லாமிய பெண் நீதிபதி என்ற பெருமையையும் பெற்றவர். இவர் தமிழகத்தின் 11வது ஆளுநராக கடந்த 1997 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் தேதி முதல் 2001 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி வரை பதவி வகித்துள்ளார்.

பாத்திமா பீவி 1950 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தின் கீழமை நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு முன்சீப் கோர்ட் நீதிபதியாகப் பணியாற்றி உள்ளார். இதனையடுத்து மாவட்ட குற்றவியல் தலைமை நீதிபதி, மாவட்ட அமர்வு நீதிபதியாகப் பணியாற்றி கடந்த 1983 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றினார். 1989 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழ்நாடு முன்னாள் ஆளுநரும், உச்சநீதிமன்ற நீதிபதியான முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவருமான பாத்திமா பீவி மறைந்தார் என்றறிந்து வருந்துகிறேன். உச்சநீதிமன்ற நீதிபதி, தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர். கேரள பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர், தமிழ்நாடு ஆளுநர் எனப் பல உயர் பொறுப்புகளில் பணியாற்றியுள்ள பாத்திமா பீவியின் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத்தெரிவித்துள்ளார்.

governor Kerala
இதையும் படியுங்கள்
Subscribe