/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/996_9.jpg)
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே திருமணமாகி 5 மாத கைக்குழந்தை உள்ள நிலையில், இளம்பெண் ஒருவர் தன் முன்னாள் காதலனைத்திருமணம் செய்ய வற்புறுத்தியதால் வனப்பகுதியில் உல்லாசமாய்இருந்துவிட்டுக் காதலி அணிந்திருந்த துப்பட்டாவால் கழுத்தை இறுக்கிக் கொன்றதோடு அவர் அணிந்திருந்த நகைகளைப் பறித்துச் சென்ற கொடூரம் அரங்கேறியுள்ளது.
வாலாஜாபேட்டை பாலாற்று தடுப்பணை அருகே வனப்பகுதியில் இளம்பெண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் இருப்பதாக பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் வாலாஜாபேட்டை போலீசார் நேரில் சென்று பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளியைப்பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
முதல்கட்டமாக காவல் நிலையங்களில் பதிவான காணாமல் போனவர்கள் குறித்த பட்டியலின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண், காவேரிப்பாக்கம் ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ரேஷ்மா லதா என்பது தெரிய வந்தது. அவர்களது பெற்றோரிடம் மேற்கொண்ட விசாரணையில் கடந்த 22ம் தேதி மருத்துவமனைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வெளியே சென்றது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து வாலாஜா அணைக்கட்டு பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதில் ரேஷ்மா லதா ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் செல்வது பதிவாகியிருந்தது. அந்தக் காட்சியை அடிப்படையாக வைத்து விசாரணையைத்தீவிரப்படுத்தியபோது அந்த மர்ம நபர் விஷாரம் பகுதியைச் சேர்ந்த குமரன் என்பது தெரிய வந்தது.
டிப்ளமோ இன் நர்சிங் முடித்த ரேஷ்மா லதா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தபோது, அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றகுமரன் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இந்தக் காதல் தொடர்ந்து வந்த நிலையில், ரேஷ்மா லதாவின் பெற்றோர்கள் சென்னை கெவின்கேர் அழகுப்பொருட்கள் தயாரிக்கும்தொழிற்சாலையில் பணியாற்றி வந்த கோபிநாத் என்பவருக்குத்திருமணம் செய்ய முடிவெடுத்துக் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்தனர்.
குமரனுக்கும் திருமணமாகி தற்போது அவரது மனைவி கர்ப்பமாக உள்ளார். ரேஷ்மா லதாவிற்கு 5 மாத கைக்குழந்தை உள்ளது. இருவருக்கும் திருமணம் ஆனாலும் காதலர்களாகவே இருந்து வந்துள்ளனர். அவ்வப்போது தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இந்த நிலையில் ரேஷ்மா லதாவிற்கும் அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு குழந்தையை சென்னைக்கு அழத்துச்சென்றுள்ளார்.
தனது தாய் வீட்டிலேயே இருந்த ரேஷ்மா லதா கடந்த 22ம் தேதி வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து வந்துள்ளார். அப்போது தனிமையில் பேசுவதற்காக வாலாஜா தடுப்பணை அருகேயுள்ள காட்டுப்பகுதிக்கு இருவரும் டூவீலரில் சென்றுள்ளனர். அங்கு பேசிக்கொண்டு இருக்கும்போது, தனது கணவருடன் பிரச்சினை உள்ளதால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு குமரனை வற்புறுத்தியதாகத்தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த குமரன்முடியாது எனச் சொல்ல இருவருக்குமிடையே வாக்குவாதம் ஆனதாகக் கூறப்படுகிறது.
அப்போது ஆத்திரமடைந்த குமரன், ரேஷ்மா லதா அணிந்திருந்த துப்பட்டாவைக் கொண்டு அவரது கழுத்தை இறுக்கிக் கொன்றுள்ளார். தொடர்ந்து ஆதாரங்கள் கிடைக்கக் கூடாது என்ற நோக்கத்தில், ரேஷ்மா லதா வைத்திருந்த செல்போன் மற்றும் அணிந்திருந்த 5 சவரன் தங்க நகைகளை எடுத்துக்கொண்டு பெங்களூருக்குச் சென்று தலைமறைவாகியுள்ளார். செல்போன் சிக்னல் உதவியோடு தனிப்படை போலீசார் குமரனை கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதிவு செய்த வாலாஜாபேட்டை போலீசார் சிறையில் அடைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)