Skip to main content

ரயில்வேயில் வேலை! முன்னாள் ராணுவ வீரரின் மகளிடம் ரூ. 3 லட்சம் மோசடி

Published on 18/10/2022 | Edited on 18/10/2022

 

ex army man daughter was Rs 3lakh have been cheated

 

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி திருச்சியில் முன்னாள் ராணுவ வீரரின் மகளிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா. முன்னாள் ராணுவ வீரரான இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருடைய மகள் மாலா(வயது 27). இவரிடம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் சென்னையில் மெட்ரோ ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பல்வேறு தவணைகளில் ரூ.3 லட்சத்தை பெற்றார். இதற்கு திருச்சியை சேர்ந்த வக்கீல் ஒருவரும் உடந்தையாக இருந்துள்ளார். அதன்பிறகு அவர்கள் கூறியபடி ரெயில்வேயில் வேலை வாங்கித் தரவில்லை. இதனால் மாலா அவரைத் தொடர்பு கொண்டு கேட்டார். அப்போது அவர் விரைவில் வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு அனுப்பப்படும் எனக் கூறி காலதாமதம் செய்து வந்துள்ளார்.

 

ரூ.3 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு, வேலை வாங்கித் தராமல் மோசடி செய்ததால் மாலா திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனரை சந்தித்து கடந்த ஜூன் மாதம் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து விசாரணை நடத்த பாலக்கரை போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. அதன் பேரில் பாலக்கரை போலீசார் மோசடியில் ஈடுபட்ட நபர்களை அழைத்து விசாரணை நடத்தினார்கள். ஆனால் அதன்பிறகு வேறெந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த மாலா, தனது புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி துணை கமிஷனர் சுரேஷ்குமாரை சந்தித்து மனு அளித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்