Skip to main content

“ஆகம விதிகளைப் படித்த அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்” - உச்ச நீதிமன்றம் அதிரடி

Published on 22/08/2023 | Edited on 22/08/2023

 

Everyone who has read the rules of Agama can become a priest Supreme Court in action

 

சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் அர்ச்சகர் நியமனத்திற்காக கடந்த 2018 ஆம் ஆண்டு விண்ணப்பங்களை வரவேற்று கோயில் நிர்வாக அதிகாரி உத்தரவினை பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவினை எதிர்த்து சுகவனேஸ்வரர் கோயிலில் அர்ச்சகராக இருக்கக்கூடிய முத்து சுப்பிரமணியம் குருக்கள் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும் தனது மனுவில் சுகவனேஸ்வரர் கோயில் ஆகமத்தின் அடிப்படையிலானது. அர்ச்சகர் நியமனத்திற்காக இந்த அறிவிப்பில் கோரப்பட்ட விண்ணப்பம் ஆகமத்தின் அடிப்படையில் இல்லை எனத் தெரிவித்திருந்தார்.

 

இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, “ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றவரை அர்ச்சகராக நியமிக்கலாம். தேர்ச்சி பெற்றவரை அர்ச்சகர்களாகக் கோயில் தக்கார்கள் நியமிக்கலாம். ஆகமத்தைக் கண்டறிய அமைக்கப்பட்ட குழு அறிக்கை அளிக்கும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. அந்தந்த கோயில்களில் பின்பற்றப்படும் ஆகமத்தில் தேர்ச்சி பெற்றவரை நியமிக்கலாம். ஒருவேளை ஆகமத்தைப் பின்பற்றாத கோயில்களில் ஆகமத்தைப் படிக்காதவர்களை அர்ச்சகராக நியமிக்கலாம்” என்று உத்தரவிட்டு இருந்தார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து மனுதாரர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

 

இதையடுத்து இந்த மேல்முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில், “ஆகம கோவில்களில் அர்ச்சகர்கள் பரம்பரையாகத் தான் நியமிக்க வேண்டும். தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என வாதிடப்பட்டது. இதனைக் கேட்ட நீதிபதிகள் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது  அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற உத்தரவுக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. இது குறித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் கோயிலின் ஆகம விதிகளைப் படித்த அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற உத்தரவுக்குத் தடை இல்லை எனத் தெரிவித்துள்ளது. மேலும் முத்து சுப்பிரமணிய குருக்கள் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்