
தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் மருதமலை முருகன் கோவிலுக்கு வருகை புரிந்தார். அவருக்கு முன்னாள் மாவட்ட தலைவர் மகேஷ் குமார் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து தினேஷ் குண்டுராவ் மருதமலை முருகனை, தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு விதிமுறைகளைப் பின்பற்றுவதில் பாரபட்சம் காட்டுவதாகவும், அனைவருக்கும் பொதுவாக இல்லாமல் எதிர்க்கட்சிகள் நடத்தும் பேரணி, பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி மறுப்பதாகவும் கூறினார். மேலும், பாரபட்சம் காட்டுவதாலேயே, நேற்று நடைபெற்ற 'ஏர் கலப்பை' யாத்திரையில், போலீசார் மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதாகத் தெரிவித்தார். தொடர்ந்து அவர், காங்கிரஸ் கட்சியைக் பொறுத்தவரை நாட்டு மக்கள் இன்னும் கட்சியை விரும்பி வருவதாகவும், இனிவரும் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி, முக்கிய இடத்தைப் பிடிக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழகத்தில் தொகுதி உடன்பாடுகள் குறித்து, இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை எனவும், பிறகு அதுகுறித்து அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். பீகார் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியில், காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்களே விமர்சனம் செய்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், காங்கிரஸ் கட்சிக்கு இது சவாலான நேரம். கருத்துகள் கூறுவது தவறில்லை. அதே நேரத்தில், கட்சிக் கட்டுப்பாடுகளை அனைவரும் மதித்து நடக்க வேண்டும். அது மூத்த உறுப்பினர்களாக இருந்தாலும் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி கருத்துத் தெரிவிப்பது சரியான நடைமுறை அல்ல எனவும் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின்போது, தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம், மாநில பொதுச் செயலாளர் செல்வம், கோவை வடக்கு மாவட்டத் தலைவர் வி.எம்.சி மனோகரன் மற்றும் பச்சமுத்து, சரவணகுமார், நடராஜ், ரங்கநாதன், மகேந்திரன், குணசேகரன், பரமசிவம், வீரகேரளம், மோகன்ராஜ், சுப்பு, காமராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.