Etharkkum Thuninthavan should not release.. pmk  condemnation!

Advertisment

நடிகர் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நாளை தமிழ்நாடு முழுக்க திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் அப்படத்தை வெளியிடக்கூடாது என பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் நாளை தமிழ்நாடு முழுக்க எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், அந்தத் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடக்கூடாது என வலியுறுத்தி கரூர் மாவட்ட பாமக மாவட்டச் செயலாளர் பிரேம்நாத், கரூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவரிடம் மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கரூர் மாவட்ட பிரேம்நாத், “ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, வழக்கறிஞராக பணியாற்றிய போது இருளர் சமுதாய மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு நடத்திய வழக்கை மையமாக வைத்து ஜெய் பீம் திரைப்படம் வெளியிடப்பட்டது. அப்படத்தில் உள்ள காவல் உதவி ஆய்வாளர் தலித் கிறிஸ்தவரான அந்தோணிசாமி என்ற பெயரை மாற்றி, வன்னியர் சங்கத் தலைவர் குருமூர்த்தி பெயரை பயன்படுத்தி வடதமிழகத்தில் வாழும் வன்னியர் இருளர் சமூகங்களுக்கு இடையே பகைமையை உண்டாக்கும் நோக்கில் வெளியிடப்பட்டது. இதனை வன்னியர் சங்கமும், பாட்டாளி மக்கள் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்த போது மறுப்பு அறிக்கை கொடுத்துவிட்டு சூர்யா தலைமறைவாகி விட்டார். தற்போது எதற்கும் துணிந்தவன் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் நாளை திரையரங்குகளில் திரைப்படத்தை வெளியிட்டால் திரையிடும் அனைத்து திரையரங்குகள் முன்பும் மிகப் பெரிய போராட்டங்கள் நடத்துவோம்” என தெரிவித்தார்.