ADVERTISEMENT

கோதாவரி – காவிரி இணைப்பை சொல்லி தமிழக மக்களை இந்த ஆட்சியாளர்கள் முட்டாளாக்க கூடாது - ஈஸ்வரன்

05:43 PM Aug 12, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

"கோதாவரி – காவிரி இணைப்பை சொல்லி தமிழக மக்களை இந்த ஆட்சியாளர்கள் முட்டாளாக்க கூடாது. முதலில் தமிழக நீர்பாசன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்" என கூறினார் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்.

ADVERTISEMENT

அவர் மேலும் கூறும்போது, "காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கர்நாடக அணைகள் நிரம்பி தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் வந்துகொண்டிருக்கும் நிலையில் இன்னும் ஒருசில நாட்கள் கனமழை தொடர்ந்தால் மேட்டூர் அணை கூடிய விரைவில் முழு கொள்ளளவை எட்டும். கடந்த சில மாதங்களாக குடிக்கவே தண்ணீர் இல்லாமல் வரலாறு காணாத வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்த தமிழகம் சற்று ஆறுதல் அடையும் நிலை உருவாகியிருக்கிறது.

ஓரிரு நாட்களில் மேட்டூர் அணை நிரம்பும் பட்சத்தில் திறந்துவிடப்படும் அதிகப்படியான தண்ணீரை கடலில் கலக்காமல் சேமித்து வைக்க தமிழக அரசிடம் என்னென்ன திட்டங்கள் இருக்கிறது என்பதை தமிழக மக்களுக்கு சொல்ல வேண்டும். கடந்த வருடம் 500 டிஎம்சி தண்ணீருக்கும் மேலாக கடலில் வீணாக கலக்க விட்டுவிட்டு மீண்டும் தண்ணீருக்காக அண்டை மாநிலங்களிடத்தில் கையேந்தி நின்றது போல இந்த முறையும் செய்ய போகிறோமா என்பதை தமிழக அரசும், தமிழக முதலமைச்சரும் தெளிவுபடுத்த வேண்டும்.

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரானது கடைமடைக்கு சென்று சேர்கிறதோ இல்லையோ ஆனால் கடலில் கலக்கிறது. நீலகிரியில் பெய்துவரும் கனமழையால் பவானிசாகர் உள்ளிட்ட அணைகளும் வேகமாக நிரம்பி வருகிறது.

காவிரியில் வரும் தண்ணீரை வீணாக கடலில் கலக்காமல் தடுக்க தமிழகத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள ஏரி, குளங்களை நிரப்பி நிலத்தடிநீரை செறிவூட்டும் திட்டங்களை நிறைவேற்ற தமிழக ஆளும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி எந்த ஆர்வமும்காட்டாமல் இருப்பது தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் சாபக்கேடானது. குறிப்பாக கடந்த ஆண்டு தமிழக முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கப்பட்ட அவிநாசி – அத்திக்கடவு திட்டமானது இன்றைக்கும் அதேநிலையில் தான் உள்ளது.

60 ஆண்டுகாலமாக தமிழகத்தில் கிடப்பில் உள்ள நீர்பாசன திட்டங்களை நிறைவேற்றி தமிழக மக்களின் தண்ணீர் தாக்கத்தை தீர்க்காமல் கோதாவரி – காவிரி இணைப்பை பற்றி பேசி தமிழக மக்களை முட்டாளாக்க நினைப்பது கடும் கண்டனத்திற்குரியது. காவிரியில் கரைபுரண்டோடும் நீரை உள்மாவட்டங்களுக்கு கொண்டு செல்லும் திட்டங்களான திருமணி முத்தாறு, அவிநாசி – அத்திக்கடவு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினால் மட்டுமே அகலப்பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கும் நிலத்தடிநீரை சற்று மேலே கொண்டு வர முடியும்.

சென்னை மாவட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாடு என்றவுடன் கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்களுக்கும், கல்குவாரி தண்ணீரை கொண்டு வருவதற்கும் மற்றும் இரயில் மூலம் தண்ணீர் கொண்டு வருவதற்கும் கோடிக்கணக்கில் செலவு செய்யும் தமிழக அரசு, மற்ற மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சத்தை போக்கும் நீர்பாசன திட்டங்களை முன்னெடுக்காமல் வெற்று அறிவிப்புகளால் மக்களை ஏமாற்ற நினைப்பது சரியல்ல. எனவே இப்போதைக்கு நிறைவேற்ற சாத்தியமில்லாத கோதாவரி – காவிரி இணைப்பை பற்றி தமிழக அரசு பேசிக்கொண்டிருக்காமல் தமிழகத்தில் உள்ள நீர்பாசன திட்டங்களை நிறைவேற்றி தமிழகத்தையும், தமிழக மக்களையும் குடிநீர் தட்டுப்பாட்டிலிருந்து காப்பாற்ற வேண்டும்." என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT