Escaped madurai prisoner arrested in tiruppur

Advertisment

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதியான ஆதி என்ற அருண்குமார், கடந்த 16-ஆம் தேதி மதுரை மத்திய சிறையின் வெளி வளாகத்தில் தோட்டப்பணியில் இருந்தபோது, சிறைக்காவலர் பழனிக்குமார் கண்ணில் மண்ணைத்தூவி விட்டு தப்பினார். சிறைக்காவலர் பழனிக்குமார் சஸ்பென்ட் செய்யப்பட்டு துறை ரீதியான நடவடிக்கைக்கு ஆளானார்.

கைதி ஆதி தப்பியோடியது குறித்து மதுரை கரிமேடு காவல்நிலையத்தில் புகாரளித்த சிறைத்துறை நிர்வாகம், சிறைத்துறை சார்பில் 5 பேர் கொண்ட குழுக்களை அமைத்து ‘ஆதி எங்கே?’ எனத் தேடுதல் வேட்டை நடத்தியது. தப்பித்த ஆறாவது நாளில், திருப்பூரில் ஆதி பிடிபட்டுள்ளார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு மீண்டும் மதுரை மத்திய சிறையில் ஆதியை அடைத்துள்ளனர்.

கைதி ஆதி பிடிபட்டது எப்படி?

ஆதியின் மனைவி மற்றும் துணைவிஎன அவனுக்கு நெருக்கமான வட்டத்தைக் கண்காணித்து வந்தது சிறைத்துறை டீம். கரூரில் ரவுடி கும்பல் ஒன்று ஆதியின் நட்பு வட்டத்தில் இருந்ததால், அவர்களும் கவனிப்பில் இருந்தனர். கோயம்புத்தூர் சிறையில் ஒரே பிளாக்கில் இருந்த கொலை வழக்கு கைதியான காதர் பாய் என்பவரிடம் ஆதி நெருங்கிப் பழகியதும், அவர் விடுதலையாகி தற்போது திருப்பூரில் வசிப்பதும் தெரியவர, சிறைத்துறை டீம் அங்கும் அலர்ட்டானது.

Advertisment

Escaped madurai prisoner arrested in tiruppur

‘எங்கு சுற்றினாலும் கையிலிருக்கும் பணம் செலவானபிறகு, காதர் பாயைப் பார்ப்பதற்கு ஆதி நிச்சயம் திருப்பூர் வருவான்’ என ஸ்கெட்ச் போட்டுக் காத்திருந்தனர், டீமில் இடம்பெற்ற சிறை உதவி அலுவலர் பழனி மற்றும் முதன்மைத் தலைமைக் காவலர் சரவணன் உள்ளிட்டோர். அவர்கள் நினைத்ததுபோலவே, 21-ஆம் தேதி காதர் பாயைப் பார்ப்பதற்கு ஆதி வர, சுற்றிவளைத்துக் கொத்தாக அள்ளினர்.

ஆயுள் தண்டனைக் கைதி ஆதியைத் தப்பவிட்டு சேறு பூசிக்கொண்ட மதுரை மத்திய சிறை நிர்வாகத்தின் மீதான கறை, அவரைப் பிடித்ததன் மூலம் கழுவப்பட்டுள்ளது.