
ஈரோடு மாநகராட்சி 2-ம் மண்டலத்துக்கு உட்பட்ட இடையன்காட்டுவலசு பகுதியில் புதிதாக ஒரு வீடு கட்டப்பட்டு வருகிறது. அந்த வீட்டின் சுற்றுச்சுவர் மாநகராட்சி விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. அதாவது 7 அடிக்கு மட்டுமே சுற்றுச்சுவர் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 20 அடிக்கு சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வந்த புகாரை அடுத்து மாநகராட்சி சார்பில் அலுவலர்கள் சென்று ஆய்வு செய்தபோது விதிமுறைகளை மீறி சுற்றுச்சுவர் கட்டப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் உத்தரவின் பேரில் உதவி செயற்பொறியாளர் பாஸ்கர் தலைமையில், இளநிலை செயற்பொறியாளர் சரவணகுமார் மேற்பார்வையில் மாநகராட்சி பணியாளர்கள் சம்பந்தப்பட்ட அந்த வீட்டைச் சேர்ந்தவர்களுக்கு நோட்டீஸ் வழங்கி ஜேசிபி எந்திரம் மூலம் சுற்றுச்சுவரை இடிக்க முயன்றனர்.
அப்போது அந்த வீட்டைச் சேர்ந்தவர்கள் மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஜேசிபி எந்திரம் மூலம் சுற்றுச்சுவர் இடிக்கும் பணி நடந்தது. அப்போது அந்த வீட்டைச் சேர்ந்தவர்கள் நாங்களே சுவரை இடித்துக் கொள்கிறோம் என்று கூறி இடித்து அகற்றினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீரப்பன்சத்திரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.