ADVERTISEMENT

கான்கிரீட் போடுவதா? இரு பிரிவாக மோதிக்கொள்ளும் விவசாயிகள்...!

08:13 PM May 19, 2022 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையிலிருந்து விவசாயம், கால்நடை பயன்பாடுகள், மக்களின் குடிநீர்த் தேவைகளுக்காக வெளியேற்றப்படும் தண்ணீர் கீழ்பவானி வாய்க்கால் மூலமாக மற்ற பகுதிகளுக்கு வருகிறது. சுமார் இரண்டு லட்சம் ஏக்கர் விவசாய நிலம் இந்த கீழ்பவானி வாய்க்காலால் விவசாய பூமியாக உள்ளது. வாய்க்கால் முழுமையான தூரத்திற்கும் இருபுறமும் மண் கரைகள் தான். 60 வருடங்களாக இப்படித்தான் கீழ்பவானி வாய்க்காலில் நீர் ஓடுகிறது.

அப்படிப்பட்ட இந்த வாய்க்காலில் நவீன சீரமைப்பு என்ற பெயரில் 709 கோடி ரூபாய் மதிப்பில் கான்கிரீட் தளம், கான்கிரீட் சுவர் எழுப்பும் பணிக்கான ஆயத்த பணிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. கான்கிரீட் தளம், சுவர் அமைந்தால் கடைமடைப் பகுதிவரை தண்ணீர் வீணாகாமல் செல்லும் என்று இத்திட்டத்திற்கு ஒரு தரப்பு விவசாய சங்கத்தினர் ஆதரவு தெரிவித்தாலும், கான்கிரீட் தளம் அமைத்தால் நிலத்தடி நீராதாரம் பாதிப்பு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என மற்றொரு தரப்பு விவசாய அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், கசிவு நீர்ப் பாசனத்தில் உள்ள 50 ஆயிரம் ஏக்கர் நிலம் பாதிக்கப்படும் என்பதாலும் இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இதனால் வாய்க்கால் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல் அப்படியே உள்ளது. இந்நிலையில், இருதரப்பு விவசாயிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் முத்துசாமி முடிவு செய்து, கடந்த வாரம் திட்டம் வேண்டாம் என்று கூறிய விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து, இன்று இத்திட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்த அமைச்சர் முத்துசாமி முடிவு செய்து, அதற்காக ஏற்கனவே அழைப்பும் விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். அமைச்சர் முத்துசாமி, கீழ்பவானி ஆயக்கட்டு பாசனதாரர்கள் சங்க பிரதிநிதிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது சங்கத்தின் தலைவர் பெரியசாமி தலைமையில் விவசாயிகள் அமைச்சர் முத்துசாமியிடம், "கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணிகளை உடனே தொடங்க வேண்டும் என ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த மே மாதம் 9-ந் தேதி செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை வைத்தோம். அப்போது செயற்பொறியாளர் மே 15ஆம் தேதி அனைத்து வேலைகளும் தொடங்கப்படும் என்று உறுதி அளித்தார். ஆனால், தற்போது வரை வேலைகள் தொடங்கப்படவில்லை.

கீழ்பவானி வாய்க்கால் மிகப் பலவீனமடைந்து தண்ணீர் செலுத்தும் திறனை இழந்துவிட்டது என 10 ஆண்டுகளுக்கு முந்தைய நீரியல் வல்லுநர் மோகனகிருஷ்ணன் அறிக்கை தெரிவிக்கிறது. அதைத் தமிழக அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது. மோகனகிருஷ்ணன் பரிந்துரையை ஏற்று கீழ்பவானி கால்வாயைச் சீரமைத்து வலுப்படுத்தத் தமிழக அரசு நபார்டு வங்கி மூலம் ரூபாய் 709 கோடி மதிப்பில் ஒரு திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டம் கடந்த வருடம் 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் பணிகள் தடைப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு கால்வாயில் பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு பல முறை தண்ணீர் நிறுத்தப்பட்டு விவசாயிகள் பெரும் இன்னலுக்கு உள்ளானார்கள். இந்த ஆண்டும் அதே போல் ஏப்ரல் 30ஆம் தேதி தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. 19 நாட்கள் கடந்த நிலையிலும் நீர்வளத்துறை திட்டவட்டமான முடிவுகளை எடுத்து சீரமைப்பு வேலைகளைத் தொடங்காமல் இருக்கின்றது. இதன் காரணமாக கீழ்பவானி ஆயக்கட்டு விவசாயிகளின் பாசன உரிமை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக இங்கு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றனர்.

இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயச் சங்கத்தைச் சேர்ந்த சில பிரதிநிதிகளும் இந்த கூட்டத்திற்கு வந்திருந்தனர். அமைச்சர் முத்துசாமி விவசாய பிரதிநிதிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்த நிலையில், அவர்களும் தங்கள் தரப்பு கருத்துக்களைக் கூற முயன்றனர். அதற்கு அனுமதி கிடைக்காததால் சில விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் எதிர்த் தரப்பைச் சேர்ந்த விவசாயிகள் அக்கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதுகுறித்து விவசாயி விஜயகுமார் என்பவர் கூறும்போது, "கீழ்பவானி வாய்க்கால் பாசனத்தில் கான்கிரீட் தளம், சுவர் அமைக்கக் கூடாது என்று ஆரம்பத்திலிருந்தே நாங்கள் கூறி வருகிறோம். இங்கு இந்த திட்டம் அமைந்தால் நிலத்தடி நீர் முழுமையாகப் பாதிக்கப்படும். குடிநீர் பற்றாக்குறையும் ஏற்படும். சிப்காட் தொழிற்சாலை கழிவு நீர் உள்ளே வர வாய்ப்புள்ளது. கான்கிரீட் போட்டால் வாய்க்கால் கசிவு நீர் முற்றிலும் தடைப்பட்டு அதனை நம்பியுள்ள விவசாயிகள் பாசனம் பெறுவது கடினம் ஆகிவிடும். கீழ்பவானி கால்வாய் 60 வருடங்களாக உள்ளது. இந்த பாசனப் பகுதியில் பல்வேறு இடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. அந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். பாசனப் பகுதிகள் அனைத்தையும் முறையாகத் தூர்வார வேண்டும்." என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT