/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_4559.jpg)
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, மான், காட்டு எருமை, கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் சிறுத்தைகள் அவ்வப்போது வனப்பகுதியைவிட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடி வருவது தொடர் கதையாகி வருகிறது.
இந்நிலையில், பவானிசாகர் வனப் பகுதியிலிருந்து கடந்த 15 ஆம் தேதி வெளியேறிய சிறுத்தை, ராஜ நகர் அருகே காந்தி நகர் கிராமத்தில் சுப்புராஜ் என்பவர் தோட்டத்திற்குள் புகுந்து மூன்று ஆடுகளை கடித்துக் கொன்றது. வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தபோது கால் தடயங்களை வைத்து அது சிறுத்தைதான் என்பது உறுதியானது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் ராஜ நகரில் வெள்ளியங்கிரி என்பவர் தோட்டத்தில் புகுந்த சிறுத்தை 4 ஆடுகளை அடித்துக் கொன்றது. கிட்டத்தட்ட 2 நாட்களில் 7 ஆடுகளை சிறுத்தை கொன்றுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் முதற்கட்டமாக தானியங்கி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கேமரா பதிவுகளை கண்காணித்த பின் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் இரவு நேரத்தில் மக்கள் வெளியே நடமாட வேண்டாம். அடர்ந்த வனப்பகுதிக்குள் கால்நடைகளை மேய்க்க அழைத்துச் செல்ல வேண்டாம் என வலியுறுத்தி உள்ளனர். மேலும் சிறுத்தை உறுமல் சத்தம், கால்நடைகள் அலறல் சத்தம் கேட்டால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)