Skip to main content

மானம் காக்கும் ஆடைகளை நம்பி பல லட்சம் வயிறுகள்....!

 

Erode textile market

 

கொடிய கரோனா வைரஸ் தொற்று காரணமாக மத்திய மாநில அரசுகளின் ஊரடங்கு, பொது முடக்கம், போக்குவரத்துத் தடை என மக்களின் அன்றாட வாழ்வே அல்லலுக்கும், அவஸ்தைக்கும் உள்ளானது. இதன் பெரும் பாதிப்பைச் சந்தித்தது தொழில் துறைதான்.

 

தென்னிந்தியாவின் புகழ் பெற்ற ஜவுளிச்சந்தை இப்போது சவக்களைப் படிந்த முகமாகக் காட்சியளிக்கிறது. ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம் என பல மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளி ரகங்கள் ஒருசேர அதன் விற்பனை கேந்திரமாக இருப்பது ஈரோடு மாநகர் தான். இங்கு நடைபெறும் ஜவுளிச் சந்தையான கனிமார்க்கெட் என்பது உலகப் புகழ் பெற்றது. வாரந்தோறும் ஒவ்வொரு திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை, இரு நாட்கள் நடைபெறும் இந்தச் சந்தையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மட்டுமல்லாமல் வேறு மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானவிலிருந்தும் வெளி மாநில மொத்த வியாபாரிகள் அதிகளவில் வந்து ஜவுளி ரகங்களை மொத்தமாகவும் சில்லறை விலையிலும் கொள்முதல் செய்வார்கள்.

 

இங்கு விற்கப்படும் ஜவுளிகள் மற்ற இடங்களைக் காட்டிலும் தரமாகவும் விலை குறைவாகவும் இருப்பதால் இங்கு அதிக அளவு மக்கள் கூட்டம் இருக்கும். மேலும் அந்தந்த கால நிலைக்கேற்பவும் ஜவுளி விற்பனை செய்யப்படுவது தனிச் சிறப்பாகும். கோடை காலங்களில் காட்டன் ஆடைகள், லுங்கி, வேஷ்டி சேலை, கைக்குட்டை போன்ற ரகங்கள், குளிர்காலத்தில் போர்வை, ஜமக்காளம் போன்றவையும் கோயில் பண்டிகை காலங்களில் பக்தர்களுக்குத் தேவையான மஞ்சள் நிற சேலை, வேஷ்டி, துண்டு போன்ற ராகங்களும் விற்பனை செய்யப்படும். ஒரு நாள் இரவு, பகல் என நடைபெறும் இந்த ஜவுளிச் சந்தையில் சர்வ சாதாரணமாக ஐந்து கோடி முதல் எட்டு கோடி ரூபாய் வரை விற்பனையாகும்.

 

தீபாவளி, தைப்பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் பத்து கோடி வரை விற்பனையாகும். ஆனால் இந்த கரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக சென்ற மார்ச் மாதத்திலிருந்து இந்த ஜவுளி சந்தைக்கு வியாபாரிகள் வருகையே இல்லை. காரணம் வெளிமாவட்ட வெளிமாநில வியாபாரிகள் வருவதற்குத் தடை உள்ளதால் ஈரோடு ஜவுளிச் சந்தை சுத்தமாகக் களையிழந்து விட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள மக்களின் வருகையும் மிகக் குறைவாக இருப்பதால் பெரும்பாலும் ஜவுளிச் சந்தை வெறிச்சோடி காணப்படுகிறது.

 

கரோனா பெயரில் வந்த இந்தத் தடையால் இதுவரை ஜவுளிச் சந்தையில் மட்டும் ரூபாய் 150 கோடி ரூபாய் வர்த்தகம் முழுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளதாக வியாபாரிகள் கவலையோடு கண்ணீர் வடிக்கிறார்கள்.

 

Erode textile market

 

இது சம்பந்தமாக ஜவுளிச் சந்தை வியாபாரிகள் கூறும்போது,

 

'இந்தப் புகழ் பெற்ற ஜவுளிச் சந்தைக்கு வடமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் ஒவ்வொரு வாரமும் வியாபாரிகள் வருகை தருவார்கள். ஆனால் தற்போது வட மாநிலங்கள் மற்றும் பிற மாவட்ட வியாபாரிகள் வரத்து இல்லை. அதற்குக் காரணம் மத்திய, மாநில அரசுகள் பொதுப் போக்குவரத்து மற்றும் ரயில் பயணத்தைத் தடை செய்துள்ளதுதான்.

 

http://onelink.to/nknapp

 

மேலும் பொதுமக்களிடம் இப்போது சுத்தமாகப் பணப்புழக்கம் குறைந்துவிட்டது என்பது கண்கூடாகத் தெரிகிறது. இதனால் எதிர்பார்த்த வியாபாரமும் நடைபெறுவதில்லை இனிவரும் காலங்கள் பண்டிகை, திருவிழா காலங்கள் என்பதால் வியாபாரம் இனியாவது சூடுபிடிக்குமா? அல்லது இதே போல் மந்த நிலையே தொடருமா என ஒன்றும் தெரியவில்லை. ஏற்கனவே இந்தக் கரோனா பீதியால் மூன்று மாதம் முழுமையாக இந்த ஜவுளிக் கடைகள் மூடப்பட்டு இருந்தன. பின்னர் இந்த மாதம் தான் திறக்கப்பட்டன, என்றாலும் எதிர்பார்த்தபடி வியாபாரம் என்பது தற்போது வரை நடக்கவே இல்லை. இதற்கெல்லாம் மிக முக்கியக் காரணம் பொதுப் போக்குவரத்து இன்னும் தொடங்கவில்லை என்பதுதான். பேருந்து, ரயில் போக்குவரத்து மீண்டும் இயங்கினால் தான் ஜவுளி விற்பனை நடைபெற தொடங்கும். ஆனாலும் பழையபடி வியாபாரம் நடப்பதற்கும் விற்பனையில் இயல்பு நிலை திரும்புவதற்கும் ஆறு மாதங்களுக்கு மேல் ஆகலாம், தொழிற்சாலை உரிமையாளர், உற்பத்தி செய்கிற தொழிலாளர்கள், விற்பனை செய்கிற வியாபாரிகள், இத்தொழில் சார்ந்து வாழும் பல லட்சக்கனக்கான குடும்பங்கள் தேங்கிக் கிடக்கும் இந்த ஜவுளி ரகங்களைப் பார்த்து கண்ணீர் விடுவது எப்போது நிற்க்குமோ?" என வேதனையோடு பேசுகிறார்கள்.

 

மானம் காக்கும் இந்த ஆடைகளை நம்பி பல லட்சம் வயிறுகள் வாடிக் கொன்டிருப்பதை அரசுகள் உணர வேண்டும்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்