
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோயில் கோராக்காட்டூரில் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருட்கரியகாளி அம்மன் கோயில் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா இங்கு நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்தாண்டும், கடந்த மாதம் 20ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் இத்திருவிழா தொடங்கியது. அதனைத்தொடந்து இம்மாதம் 1ஆம் தேதி கிராமசாந்தியும் 2ஆம் தேதி கொடியேற்றம் சந்தனகாப்பு மற்றும் சுமங்கலி பூஜைகளும் நடைபெற்றது.
3ஆம் தேதி தீ குண்டம் அமைக்கும் பணி தொடங்கியது. கரும்பு கொண்டு வருதல், குண்டம் அமைக்கப்பட்டு பொங்கல் வைத்தல் மற்றும் தீ மூட்டுதல் போன்ற நிகழ்வுகள் தொடர்ந்தது. 4ஆம் தேதியான வியாழக்கிழமை அதிகாலை சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 18 கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இவ்விழாவிற்கு, சிறுவலூர் காவல்துறையினர் சார்பில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இவ்விழாவினை தொடந்து 5ஆம் தேதி தேர் உற்சவ நிகழ்சியும் 6ஆம் தேதி முத்துப்பல்லக்கு கரகாட்டம் வாணவேடிக்கை நிகழ்சியும் நடைபெறவுள்ளது. 7ஆம் தேதி மஞ்சள் நீராட்டு நிகழ்வுடன் திருவிழா முடிவடைகிறது. இது இயக்குனர், நடிகர் பாக்கியராஜ் சிறுவயதில் வாழ்ந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.