/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/erode-art_5.jpg)
ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ. 67 கோடி மதிப்பில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. 8 மாடி கொண்ட கட்டடத்தின் இறுதிக் கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை ஆய்வு செய்வதற்காக அமைச்சர்கள் எ.வ. வேலு, சு.முத்துசாமி ஆகியோர் இன்று ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்திற்கு வந்தார்கள். அங்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டடங்களை அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கட்டடத்தின் ஒவ்வொரு பகுதியாகச் சென்று கட்டடம் தரமாகக் கட்டப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்தனர்.
அதன் பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஈரோடு தலைநகரில் அமைந்துள்ள மருத்துவமனையில் கூடுதலாக 350 படுக்கைகள் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரூ. 67 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. 11.3.2021 ஆம் ஆண்டு கட்டடப் பணி தொடங்கியது. கட்டுமானப் பணிகள் தரமாக உள்ளதா என்பது குறித்து ஆய்வுசெய்தோம். தரமான பொருட்களைப் பயன்படுத்தித்தான் கட்டப்பட்டுள்ளது. இன்னும் சிறு சிறு பணிகள் மட்டும் உள்ளது. ஒரு மாத காலத்திற்குள் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து விடும். சாலை பணியாளர்கள் நியமனம் செய்யும்போதே சாலை பணிகளுக்கு தான் என்றும் அவர்களுக்கு பதவி உயர்வு என்பது அரசாங்க விதிகளில் இல்லை.
கோபியில் சங்கம் என்ற பெயரில் சாலை பணியாளர்களைத்தூண்டிவிட்டு போராட்டம் செய்து வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சாலை பணியாளர்கள் பணிக்கு திரும்பவில்லை என்றால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். பெருந்துறையில் அதிக விபத்து ஏற்படுவதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையின்படி நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதியுள்ளேன். அடுத்த முறை டெல்லிக்கு செல்லும்போது பாலம் வருவதற்கு வலியுறுத்தி தமிழ்நாடு அரசு முயற்சி எடுக்கும். நெடுஞ்சாலைத்துறையில் பொறியாளர் மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளில் கடைநிலை ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்படும் நிலையில் இளநிலை உதவியாளர், உதவியாளர் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்படவில்லை என்ற கேள்விக்கு நெடுஞ்சாலைத்துறையில் 2003க்கு பின்னால் இருப்பவர்கள் இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு அளிக்கக் கூடாது எனவும் தமிழ்நாடு சர்வீஸ் கமிஷன் மதிப்பெண் அடிப்படையில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதனைத்தமிழக அரசு ஆய்வு செய்து வருகிறது. ஆய்வின் முடிவில் முதல்வர் ஆணையின்படி பதவி உயர்வு வழங்கப்படும். விதிக்கு உட்பட்டு அனைவருக்கும் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, அந்தியூர் செல்வராஜ் எம்.பி. பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)