/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_330.jpg)
தமிழகம் முழுக்க பருவ மழை பெய்துவருகிறது. சில இடங்களில் கன மழையாகவும் சில பகுதிகளில் தூறலாகத் தொடர் மழையாகவும் பெய்கிறது. ஈரோடு மாவட்டத்திலும் தொடர் மழை பெய்கிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பத் தொடங்கிவிட்டது.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஓடத்துறை ஊராட்சியில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் 15 அடி உயரமும் 45.88 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்ட மிகப்பெரிய ஏரி அமைந்துள்ளது. அந்த ஏரிக்கு, கீழ்பவானி பிரதான பாசனக் கால்வாய்க் கசிவு நீர் மற்றும் மழைக் காலங்களில் வழிந்தோடும் மழை நீர் ஆகியவை வரும்.
இந்த ஏரியின் மூலம் நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலம் பாசனவசதி பெற்றுவருகிறது. கடந்த ஆண்டுகளில் தூர்வாரப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டு ஆழப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், கீழ்பவானி பிரதான வாய்க்காலில் முதல்போகச் சாகுபடிக்குத் தண்ணீர் திறக்கப்பட்டதால், அதன் கசிவுநீர் தண்ணீர் ஓடத்துறை ஏரிக்கு வந்து சேர்ந்தது. சென்ற சில நாட்களில் பெய்த தொடர் மழையினால் நீர் வரத்துத் தொடர்ந்து அதிகரித்து, ஏரியின் முழுக்கொள்ளளவான 15 அடி உயரமும் 45.88 மில்லியன் கன அடி கொள்ளளவும் நிரம்பிவிட்டது.
இதனால், ஏரிக்கு வருகிற மொத்த நீரும் விநாடிக்கு 200 கன அடி வீதம் உபரி நீராக வெளியேற்றப் பட்டுவருகிறது. மேலும், மழை அதிகரித்தால் ஏரிக்கு நீர்வரத்தும் தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் அப்போது உபரி நீர் ஓடையிலும் அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்படும் எனவும் அதனால் உபரிநீர் ஓடையில் வசிக்கும் விவசாயிகள், பொதுமக்கள் பாதுகாப்பாக மேடான பகுதிக்குச் செல்லுமாறு பொதுப் பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)