ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! - ஆந்திராவுக்கு விரைந்த தனிப்படை 

Erode police went to andhra to arrest accused

ஈரோடு ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகச்சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் தகவல் தெரிவித்து விட்டு தொலைப்பேசி இணைப்பை துண்டித்துவிட்டார். இதைத் தொடர்ந்து ஈரோடு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்குத்தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்தத் தகவலைத் தொடர்ந்து ஈரோடு போலீசார் உஷார்படுத்தப்பட்டு ஈரோடு சூரம்பட்டி போலீசார், ரயில் நிலையத்திற்கு விரைந்து சென்றனர். இதேபோல் வெடிகுண்டு நிபுணர்களும் மோப்ப நாயுடன் ஈரோடு ரயில் நிலையத்திற்கு விரைந்து சென்றனர். இவர்களுடன் ஈரோடு ரயில்வே போலீசாரும் மெட்டல் டிடெக்டர் கருவிகளுடன் ரயில் நிலையம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர்.

ஈரோடு ரயில்வே நுழைவு பகுதி, டிக்கெட் கொடுக்கும் இடம், அனைத்து நடைமேடைகள், பார்சல் வழங்கும் இடம், இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம் கழிப்பறைகள் என அனைத்து இடங்களிலும் போலீசார் அங்குலம் அங்குலமாக சோதனையில்ஈடுபட்டனர். இரவு நேரத்தில் ஈரோடு மார்க்கமாக அதிகமான ரயில்கள் வந்து செல்வதால் பயணிகள் கூட்டம் நேற்று அதிகளவில் இருந்தது. திடீரென போலீசார் சோதனை செய்வதைப் பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பயணிகள் உடைமைகளும் கடும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டது.

அந்த சமயம் ஈரோடு ரயில் நிலையத்திற்கு வந்த அனைத்து ரயில்களையும் போலீசார் சோதனை செய்தனர். ஒவ்வொரு பெட்டியாகச் சென்று பயணிகள் உடைமைகளையும் சோதனை செய்தனர். சுமார் ஒரு மணி நேரம் சோதனையில் ஈடுபட்ட பின்னர் வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத்தெரியவந்தது. இதனை அடுத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்குத்தகவல் கொடுத்தது யார்? என்று போலீசார் விசாரணை தொடங்கினர். அப்போது ஆந்திராவில் இருந்து வெடிகுண்டு புரளி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. செல்போனில் பேசிய நபரின் டவர் ஆந்திராவைக் காட்டியது. இதை அடுத்து இன்று காலை ஈரோடு ரயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரசன்னா தலைமையில் 4 பேர் கொண்ட தனிப்படையினர் ஆந்திரா விரைந்துள்ளனர்.

Erode police
இதையும் படியுங்கள்
Subscribe