
ஈரோடு மாவட்ட பகுதிகளில் செல்ஃபோன்கள் திருட்டு சம்பவம் தொடர்ந்து நடந்துவந்தது. இதுகுறித்து செல்ஃபோன்களைப் பறிகொடுத்தவர்கள் அந்தந்த காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர். போலீசார் வழக்குப் பதிவுசெய்து செல்ஃபோன் திருட்டில் ஈடுபடுவோரைப் பிடித்து செல்ஃபோன்களை மீட்டு வந்தனர்.
கடந்த ஒன்றாம் தேதி ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் திருடுபோன 57 செல்ஃபோன்களைப் போலீசார் மீட்டு அதை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த செல்ஃபோன்களின் மதிப்பு ரூபாய் 9 லட்சத்து 19 ஆயிரம். இதில் விலை உயர்ந்த ஸ்மார்ட்ஃபோன்கள் முதல் சாதாரண செல்ஃபோன்கள் வரை அடங்கும். ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் செல்ஃபோன்களை அதற்கு உரியவர்களிடம் வழங்கினார். சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி. ஜானகிராமன், தொழில்நுட்ப பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் செல்வி உள்ளிட்ட போலீசார் உடனிருந்தனர். ஈரோடு மாவட்டத்தில் இந்த வருடத்தில் இதுவரை காணாமல், அல்லது தொலைந்து போன மொத்தம் 158 செல்ஃபோன்களை மீட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதன் மதிப்பு ரூ. 26 லட்சமாகும்.