Skip to main content

அதிகரிக்கும் தெருநாய்களின் தொல்லை; அச்சத்தில் பொதுமக்கள்

 

erode municipal corporation street dog issue 

 

ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. இந்த 60 வார்டுகளிலும் சமீபகாலமாக தெருநாய்களின் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தெருவில் சுற்றித் திரியும் நாய்களைப் பிடித்து குடும்பக் கட்டுப்பாடு செய்யும் முறை இல்லாததால், தெருநாய்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. தெருக்களில் செல்லும் வாகன ஓட்டிகள், இரவு நேரத்தில் தனியாகச் செல்லும் பெண்களை தெருநாய்கள் கடிக்கத் துரத்துகின்றன. இது தொடர்பாக மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் தெருநாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தனர்.

 

இந்நிலையில், ஈரோடு மாநகராட்சி 10-வது வார்டுக்கு உட்பட்ட வில்லரசம்பட்டி பகுதியில் சில நாட்களாகவே தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்திருந்தனர். 200-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கூட்டமாக அந்தப் பகுதியில் சுற்றி வருகின்றன. இந்த தெருநாய்கள் கால்நடைகளை குறிவைத்து அவற்றைக் கடித்துக் குதறி வருகின்றன. வீட்டில் வளர்க்கும் ஆடுகள், கன்றுகளையும் கடித்து வருகின்றன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வில்லரசம்பட்டி பகுதியில் வசிக்கும் பழனிசாமி என்பவரின் 4 ஆடுகள், ஒரு மாட்டுக்கன்றை தெருநாய்கள் கடித்துக் கொன்றன.

 

இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் வில்லரசம்பட்டி பகுதியில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. வில்லரசம்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் ஆடுகள், மாடுகள், கோழிகளை வளர்த்து வருகிறார். வீட்டின் பின்னால் கால்நடைகளைக் கட்டி வைப்பது வழக்கம். அதேபோல் 1ந் தேதி  இரவு வீட்டின் பின்பகுதியில் கால்நடைகளை கட்டியிருந்தார். அதிகாலை 3 மணி அளவில் வீட்டின் பின்னால் இருந்து ஆடு, மாடுகள் அலறும் சத்தம் கேட்டது. இதைக் கேட்டு திடுக்கிட்டு எழுந்த சரவணன் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது வீட்டில் வளர்த்த ஆடுகள், கோழிகளை தெருநாய்கள் கூட்டமாக வந்து கடித்துக் குதறிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், கதவைத் திறந்து வெளியே சென்று பார்த்தபோது 4 ஆடுகள், 4 கோழிகளை தெருநாய்கள் கடித்துக் கொன்றுவிட்டது தெரியவந்தது. கடந்த பத்து நாட்களில் இது மூன்றாவது சம்பவம் என்பதால் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியும் பீதியும் அடைந்துள்ளனர்.

 

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, "வில்லரசம்பட்டி பகுதி மாநகராட்சி 10-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியாகும். இங்கு 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த சில நாட்களாக எங்கள் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளன. 200-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் எங்கள் பகுதியில் சுற்றி வருகின்றன. இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளை நாய்கள் துரத்துவது தொடர்கதையாகி வருகிறது. மேலும், இரவு நேரங்களில் பெண்கள், குழந்தைகள் சாலைகளில் செல்லவே அச்சப்படுகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே வீட்டில் வளர்த்து வரும் கால்நடைகளைக் குறிவைத்து தெருநாய்கள் தாக்கிக் கடித்துக் கொன்று வருகின்றன. இதனால் நாங்கள் அதிர்ச்சியும் பீதியும் அடைந்துள்ளோம். அடுத்ததாக இந்தத் தெருநாய்கள் குழந்தைகளைக் கடிக்கும் முன்பு தெருநாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !