Skip to main content

அடுக்குமாடி வீடுகட்டும் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு!

Published on 17/02/2021 | Edited on 17/02/2021

 

Erode kavunthambadi People said we don't need  new apartment building project ..!


ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகே உள்ள ஐயன்வலசு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் திட்டத்தைக் கைவிடக்கோரி அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு அடையாளமாக 500க்கும் மேற்பட்ட வீடுகளில் கறுப்புக் கொடிகளை ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள கவுந்தப்பாடி ஐயன்வலசு மற்றும் அதனையொட்டியுள்ள 3 கிராமங்களில் அரசுக்குச் சொந்தமான நிலப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த பல ஆண்டுகளாகக் குடியிருக்கும் இப்பகுதியினரில் பலர் பட்டா வாங்கியும், பட்டா இல்லாமல் சிலரும் வீடு கட்டியுள்ளனர். இங்கு அனைத்துத் தரப்பினரும் கலந்து குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில், ஐயன்வலசு மற்றும் அதனையொட்டியுள்ள கிராமங்களில் வீடில்லாதவர்களுக்கு வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு வீடுகள் கட்ட முடிவுசெய்யப்பட்டுள்ளது. 

 

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் குடியிருந்துவரும் அனைத்துத் தரப்பினரின் வீடுகளையும் காலிசெய்திட உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதியினர், ‘பல ஆண்டுகளாகப் பட்டா பெற்று அரசு அனுமதியுடன் வீடுகட்டி குடியிருப்போரை காலி செய்துவிட்டு அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டும் திட்டத்தைக் கைவிட வேண்டும்’ என்று வலியுறுத்தி வருகின்றனர். 

 

இந்நிலையில் கால அவகாசம் வழங்கப்பட்டு அதற்குள் காலி செய்யாவிட்டால் வீடுகள் இடித்து அகற்றப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடி வீடுகள் கட்டும் திட்டத்தைக் கைவிடாவிட்டால் அடுத்தகட்டமாக 4 கிராமங்களைச் சேர்ந்த மக்களும் தங்களது குடும்பத்துடன் சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்துள்ளனர். மேலும், தற்போது குடியிருந்துவரும் வீட்டு முகவரிகளில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள குடும்ப அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியரிடம் திருப்பி ஒப்படைக்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்