
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் நூல் வியாபாரி ஒருவரின் தற்கொலை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லாட்டரி மூலம் 62 லட்சம் ரூபாய் வரை பணத்தை இழந்ததால் நிகழ்ந்த தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் முல்லை நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். நூல் வியாபாரம் செய்து வந்த ராதாகிருஷ்ணன் நேற்று அவரது செல்போனில் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், தனது தற்கொலைக்கு கருங்கல்பாளையம் 39 ஆவது வார்டு திமுக கவுன்சிலர் கீதாஞ்சலியின் கணவர் செந்தில்தான் காரணம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அந்த வீடியோவில் பேசும் ராதாகிருஷ்ணன் ''கீதாஞ்சலியின் கணவர் செந்தில் லாட்டரி ஏஜென்சி நடத்தி வந்தார். அவரிடம் கிட்டத்தட்ட 62 லட்ச ரூபாயை நான் லாட்டரியில் விட்டுட்டுடேன். என் தற்கொலைக்கு பிறகு 30 லட்சம் ரூபாயை பெற்று என் குடும்பத்திற்கு தரவேண்டும்.
லாட்டரி விற்பனையால் என்னைப் போல பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. லாட்டரி சீட்டை எப்படியாவது ஒழிச்சிருங்கண்ணா'' என வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமிக்கு கோரிக்கை வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எந்தெந்த காலகட்டத்தில் எவ்வளவு பணத்தை நூல் வியாபாரி ராதாகிருஷ்ணன் லாட்டரியில் இழந்தார் என்ற ஆதாரங்களை திரட்டி வருவதாகவும், அதன் பின்னர் இந்த வழக்கில் முறையான விசாரணை தொடரும் எனவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே நூல் விலை ஏற்றம் தொடர்பாக ஜவுளி துறையில் ஏற்பட்டுள்ள சறுக்கல் காரணமாக ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜவுளி துறையினர், நூல் வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்து வரும் சூழலில் லாட்டரி சீட்டு காரணமாக நூல் வியாபாரி தற்கொலை செய்து கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.