Advertisment

அடியோடு சாய்ந்த வாழைகள்... வேதனையில் விவசாயிகள்...

வாழ்வாதாரம் என்பது உழைப்பின் மூலம் நடக்கிற உற்பத்தியை பொறுத்து தான். அப்படி உற்பத்தி செய்யப்படும் பொருள் விற்பனையான பிறகு அதுவே உழைப்புக்கு கிடைக்கிற ஊதியமாக இருக்கும். அந்த ஊதியம் தான் உழைப்பாளி குடும்பத்திற்கு வாழ்வாதாரமாக விளங்கும். ஆனால் இப்போதெல்லாம் எல்லா தொழில்களிலும் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை என்பது எல்லோரும் அறிந்ததே.

Advertisment

அதுவும் இந்த கரோனா காலம் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுவிட்டது. அதற்கு காரணம் ஊரடங்கு, போக்குவரத்து நிறுத்தம், தொழிற்சாலைகள் உள்பட பலவும் மூடப்பட்டதுதான், வறுமை, கடன் சுமை, வைரஸ் தொற்று நோய் பயம் என மக்கள் இப்போது துன்பத்துடன் தான் நாட்களை நகர்த்துகிறார்கள். இதில் விவசாயிகளின்நிலை மிகவும் கடினம். இந்த கொடிய காலத்திலும் விளைபொருட்களுக்கான உரிய விலை கிடைக்காமல் திண்டாடுகிறார்கள். இந்த நிலையில் இயற்கை சீற்றமும் கொடும் துன்பத்தை கொடுத்துள்ளது வாழை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு என்பது தான் இந்த வேதனையான செய்தி.

Advertisment

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளான தூக்கநாயக்கன்பாளையம், மொடச்சூர், வெள்ளாங்கோவில், சத்தியமங்கலம், கவுந்தப்பாடி என பல ஊர்களில் 20 ந் தேதி திங்கள்கிழமை மாலை முதல் இரவு 11 மணிவரை அந்தப் பகுதிகளில் கன மழையும் சூறைக்காற்றும் வீசியது. பலத்த மழையோடு வீசிய சூறைக்காற்று பல இடங்களில் மரங்களை கூட கீழே தள்ளியது.

அலிங்கியம், குருமந்தூர், ஆண்டவர் மலை, பூதிமடைபுதூர், கோட்டுப் புள்ளாபாளையம் ஆகிய விவசாய நிலங்களில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் பல விவசாய குடும்பங்கள் வாழை மரம் சாகுபடி செய்கிறார்கள். அந்த வாழைகள் அறுவடைக்கு தயாராக இருந்தது. செவ்வாழை, கதளி, தேன் கதிர் என உயர் ரக வாழை பயிர்கள் அவை. அடித்த சூறைக்காற்று இந்த வாழை மரங்களை அடியோடு சாய்த்து விட்டது. இன்னும் சில நாட்களில் அறுவடை செய்ய தயாராக இருந்த அந்த வாழைகள் முற்றாக முடிந்துவிட்டது. விவசாயிகள் போட்டு வளர்த்த இடுபொருள் பல லட்சம் ரூபாய் சூறை காற்றோடு சேர்ந்து மடிந்துவிட்டது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் கண்ணீரோடு கதறுகிறார்கள். அரசிடம் எங்களுக்கு இழப்பீடு கொடுங்கள் என வேதனையோடு கேட்கிறார்கள்.

ஆனால் இதேபோல் சென்ற வருடமும் வீசிய சூறைக்காற்றில் வாழை உட்பட விவசாய பொருட்கள் பலவும் அழிந்தது. அப்போதும் அரசு அதிகாரிகள் வந்தார்கள். ஏதோ கணக்கெடுத்தார்கள். பிறகு சென்றார்கள் ஆனால் இதுவரை பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு எதுவுமே வரவில்லை என இப்போதும் கண்ணீரோடு கூறுகிறார்கள். பல்வேறு மாநிலங்களில் அந்தந்த அரசுகள் விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு இதுபோன்ற இயற்கை சீற்றத்தால் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு தனிநபர் பயிர் காப்பீட்டு திட்டம் செய்துள்ளது.

அதன் மூலமாக விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைத்து வருகிறது. அது போல் தமிழகத்திலும் தனிநபர் பயிர் காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என இப்போதும் கூறி வருகிறார்கள். தென்னையைப் பெத்தா இளநீரு, பிள்ளையப் பெத்தா கண்ணீரு என்பது உண்மையோ பொய்யோ, இந்த வாழையை வளர்த்த எங்கள் வாழ்வு கண்ணீராக உள்ளது என கவலையோடு கூறுகிறார்கள் ஈரோடு மாவட்ட விவசாயிகள்.

banana Erode Farmers heavy rain trees
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe