
சினிமாவை மிஞ்சிய கொலை சம்பவம் ஈரோட்டில் பட்டப்பகலில் நிகழ்ந்துள்ளது. ஈரோடு கருங்கல்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் கலையரசன் என்கிற கலை, குணசேகரன் என்கிற குணா. இந்த இருவரும் பிரபல ரவுடிகள். இவர்கள் மீது ஈரோடு, மதுரை உட்பட பல ஊர்களில் கொலை வழக்குகள் உள்ளன. குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள், சென்ற ஒரு மாதத்திற்கு முன்புதான் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். சிறையிலிருந்து வந்தவர்கள் மீண்டும் பல்வேறு கிரிமினல் வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
பல ரவுடி குழுக்களுக்கும் இவர்களுக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் உள்ள ஒரு ரவுடி குரூப்பினருக்கும் இந்தக் கலை மற்றும் குணாவுக்கும் ஒரிரு நாட்களுக்கு முன்பு மோதல் நடந்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று (10.02.2021) பகல் 2 மணிக்கு ஈரோடு வீரப்பன்சத்திரம் என்ற இடத்திற்குச் சென்ற ரவுடிகள் கலை மற்றும் குணாவை மற்றொரு ரவுடி குழு சுற்றி வளைத்தனர். குறுகிய தெருவான அதில் மக்கள் நெருக்கமான குடியிருப்புகள் உள்ள பகுதி. அரிவாள் உட்பட பயங்கர ஆயுதங்களுடன் துரத்தி வெட்டியுள்ளனர்.

இதில் ரவுடிகள் குணா மற்றும் கலை சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். மக்கள் வாழும் பகுதியில் ரவுடிகள் வேட்டையாடப்பட்டு இரட்டை கொலை நடந்திருப்பது அப்பகுதி மக்கள் மட்டுமில்லாமல், ஈரோட்டையே பீதியடைய வைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொலையான இருவர் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையில் ஈடுபட்ட ரவுடிகளைப் பட்டியல் எடுத்து தீவிர தேடலில் ஈடுபட்டுள்ளார்கள் ஈரோடு போலீஸார். சில காலமாக ரவுடிகள் மோதல் இல்லாமல் அமைதியாக இருந்த ஈரோடு, இந்த இரட்டை கொலை மூலம் மீண்டும் பரபரப்பையும் திகிலையும் மக்களுக்குக் கொடுத்துள்ளது.