ஈரோடு வரும் முதல்வர் எடப்பாடிக்குக் கருப்புக்கொடி... -விவசாய சங்கம் அறிவிப்பு!

Agricultural Association

கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்குவதை நிறுத்தி வைக்கும் முடிவை அரசு உடனடியாகக்கைவிட வேண்டும் எனத் தமிழக விவசாயிகள் சங்கம் கோரியுள்ளது.

மத்திய அரசு கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் பேங்க் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதால் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்குக் கடன் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து, 17 ஆம் தேதி ஈரோடு வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்குக் கருப்புக் கொடி காட்டி கண்டனப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இதுசம்பந்தமாக அச்சங்கத்தின் ஈரோடு மாவட்டச் செயலாளர் சுப்பு கூறும்போது, "தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன், நகைக் கடன் உள்ளிட்ட அனைத்து வகை கடன்களும் வழங்குவதை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது. விவசாயிகளின் வைப்புத்தொகையில் செயல்படும் கூட்டுறவு வங்கிகளை முடக்க அரசு முயற்சிப்பதாக வலுவான சந்தேகம் எழுந்துள்ளது.

கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டு, 'ஆடிபட்டம் தேடி விதை' என்பதைப் போல பயிர் சாகுபடிக்கான நேரம் தொடங்கிய நிலையில் இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியைக் கொடுக்கிறது. ஏற்கனவே கரோனோ ஊரடங்கால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

பயிர் சாகுபடிக்கு உரம், பூச்சிக்கொல்லி, விவசாய இடுபொருட்களை வாங்க முடியாமல், விவசாயிகள் அடுத்தடுத்த சாகுபடியைத் தொடங்க முடியாத அவல நிலை ஏற்படும். தமிழக அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தும், இந்த உத்தரவைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 17 ஆம் தேதி ஈரோடு வரும் போது அவருக்குக் கருப்புக் கொடி காட்டி கன்டன போராட்டம் நடத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

http://onelink.to/nknapp

அதே நாளில் விவசாயிகள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி கட்டி மொத்த எதிர்ப்பையும் வெளிப்படுத்துவோம். சிறு, குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளையே நம்பி உள்ள நிலையில், கரோனோ காலத்தில், அரசின் இந்த முடிவு 'வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும்' நடவடிக்கையாக உள்ளது. முதலமைச்சர் ஈரோடு வருவதற்கு முன்பாக இந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம்" என்றார்.

Agricultural Association cooperative banks eps Erode
இதையும் படியுங்கள்
Subscribe