erode east constituency by election control room opened 

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெராகடந்த 4 ஆம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. ஈரோடு மாநகராட்சி அலுவலகம் தேர்தல் நடத்தும் அலுவலகமாக மாறி உள்ளது. 20 ந் தேதி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது. தேர்தல் சம்பந்தமாக வரும் புகார்களை பெறுவதற்காக இந்த கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

Advertisment

இது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலரும் ஈரோடு மாநகராட்சி ஆணையாளருமான சிவகுமார் கூறும்போது, "ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவதை ஒட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இன்று மாநகராட்சி அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இங்கு சுழற்சி முறையில் 24 மணி நேரமும் இதற்கென்று தனியாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக 180042594890 என்ற இலவச எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். சுழற்சி முறையில் பணியாளர்கள் இதில் இருப்பார்கள். இங்கு வரும் புகார்கள் பறக்கும் படைக்கும், தேர்தல் அதிகாரிக்கும் தெரிவிக்கப்படும்.

Advertisment

இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் 4 பேர் கொண்ட நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. தொகுதி எல்லைகளில் இவர்கள் சுழற்சி முறையில் வாகன தணிக்கையில் ஈடுபடுவார்கள். இந்தக் குழுவில் ஒரு டிரைவர் ஒரு கேமராமேன் ஒரு போலீசார் உள்பட 4 பேர் இருப்பார்கள். இவர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக ரொக்க பணம் எடுத்துச் செல்பவர்கள் உரிய ஆவணங்களுடன் எடுத்து செல்ல வேண்டும். திருமண மண்டபங்களில் கூட்டம் அல்லது நிகழ்ச்சி நடத்துபவர்கள் தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. நிலை கண்காணிப்புக் குழுவை தொடர்ந்து பறக்கும் படை அமைக்கப்பட உள்ளது" என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து கட்சி பிரமுகர்கள், போலீசார், அச்சக உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் தேர்தலில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. பொதுமக்கள் வியாபாரிகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் கூட்டத்தில் பேசினார்கள்.

Advertisment