
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் 10க்கும் மேற்பட்ட சுயேச்சைகள் வினோதமான முறையில் வந்து வேட்புமனு தாக்கல் செய்தனர். முதல் நாளில் மனுத் தாக்கல் செய்தவர்களில் நான்கு பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. மற்ற 6 பேரின் மனுக்கள் முறையாகப் பூர்த்தி செய்யாததால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன. 2வது நாளான பிப்ரவரி 1 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியதில் சுயேச்சைகள் மற்றும் சில அரசியல் கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இரண்டாவது நாளில் 6 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. முதல் இரண்டு நாட்களில் 10 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதைத் தொடர்ந்து மூன்றாவது நாளான நேற்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் இன்று திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளது. மேலும் அமமுக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர். இதனால் இன்று ஈரோடு மாநகராட்சி அலுவலகம் பரபரப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணியின் வேட்பாளர் இன்று மனுத் தாக்கல் செய்ய இருந்த நிலையில் இன்று காலை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினார். ஈரோடு இடைத்தேர்தல் குறித்து விவாதிக்கலாம் என்ற தகவல் வெளியானது. இந்நிலையில் அதிமுக பழனிசாமி தரப்பில் வேட்புமனு தாக்கல் ஒத்திவைக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக வேட்புமனு தாக்கல் ஒத்திவைக்கப்பட்டு பிப்.7 ஆம் தேதி நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு டவுன் டிஎஸ்பி ஆனந்தகுமார் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்ய வருவதால் அனைத்து ஏற்பாடும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து 7ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. 8ம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. 10ம் தேதி வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாளாகும். அன்று மாலை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதையடுத்து தேர்தல் பிரச்சார களம் சூடுபிடிக்கத் தொடங்கி விடும்.