ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவேரா கடந்த 4ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததைத் தொடர்ந்துஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்கதொடங்கியுள்ளது.
ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி மாவட்ட தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். தேர்தல் நடத்தும் அலுவலராக மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரி பார்க்கும் பணி பெல் நிறுவனத்தைச் சேர்ந்த 8 பொறியாளர்கள் கொண்ட குழுவால் 19 ஆம்தேதி தொடங்கி மூன்று நாட்களாகநடைபெற்று வருகிறது.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலில் முழுவதும்விவிபேட் இயந்திரம்பயன்படுத்தப்படுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் மூன்று பறக்கும் படைகள்மற்றும் மூன்று கண்காணிப்புக் குழுக்கள்அமைக்கப்பட்டுள்ளன. மேலும்,வருமான வரி அதிகாரிகள் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு 20ந் தேதி மாலை முதல் தங்களது பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், உரிய ஆவணம் இல்லாமல் ரூபாய் 50 ஆயிரத்துக்கும் மேல் ஒருவர் பணம் கொண்டு சென்றால், அந்தப் பணம் பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் வியாபாரிகள் கடும் கலக்கத்தில் உள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் பெரும்பாலும் ஜவுளி சார்ந்த தொழில்கள் அதிகளவில் உள்ளன. சிறிய ஜவுளிக்கடைகள் முதல் பெரிய ஜவுளிக்கடைகள் வரை 500-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு கோடிக்கணக்கில் பண வர்த்தகம் ஒவ்வொரு நாளும் நடைபெற்று வருகிறது.
தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் தொழிலதிபர்கள், வியாபாரிகள் ரொக்கப் பணத்திற்கு உண்டானவரவு செலவு கணக்குகளைக் காண்பிப்பது குறித்துகலக்கத்தில் உள்ளனர்.