Advertisment

ஸ்பின்னிங் மில்லில் திருட்டு; சிறுவன் உள்பட 3 பேரை விரட்டி பிடித்த மக்கள்!

Erode Dt Gobi near Kolappalur Unit Town Private Spinning Mill incident

Advertisment

ஈரோடு மாவட்டம் கோபி அருகே கொளப்பலூர் யூனிட் நகரில் தனியார் ஸ்பின்னிங் மில் உள்ளது. இந்த மில் கடந்த 4 ஆண்டுகளாகச் செயல்படாமல் உள்ளது. இந்த மில்லில் காவலாளி ஜெயராமன் (வயது 55) என்பவர் இரவு நேர பாதுகாப்புப் பணியில் இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று (01.01.2024) நள்ளிரவில் மில்லின் பின்புறம் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்த 4 பேர் மில் வளாகத்தில் இருந்த மின்சாதன பொருட்கள், பழைய இரும்பு பொருட்களைத் திருடிக் கொண்டிருந்தனர். சத்தம் கேட்டு மில் காவலாளி ஜெயராமன் மில்லின் பின்புறம் சென்று பார்த்தபோது 4 பேர் கொண்ட கும்பல் பொருட்களைத் திருடிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதைத் தொடர்ந்து ஜெயராமன் சத்தமிட்டவாறே திருடர்களைப் பிடிக்க முயன்ற போது 4 பேரும் தப்பி ஓடினர். அதற்குள் ஜெயராமனின் சத்தம் கேட்ட அருகில் உள்ளவர்கள், மில் காம்பவுண்ட் சுவர் ஏரி குதித்துத் தப்பிய திருடர்களில் மூன்று பேரை விரட்டி பிடித்து சிறுவலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து பிடிப்பட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் 3 பேரும் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் வெங்கமேட்டை சேர்ந்த கவிராஜ் (வயது 27), மனோஜ் (வயது 19) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. மேலும் இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிடிபட்ட மூன்று பேரும் பகலில் குன்னத்தூரில் உள்ள பன்றி இறைச்சிக் கடையில் வேலை செய்து வந்ததும், இரவில் கொள்ளை அடிக்க சென்றதும் தெரிய வந்தது.

இதில் மனோஜ் மீது சிவகிரி போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கு நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் நஞ்சை புளியம்பட்டியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் தப்பி ஓடியது தெரிய வந்தது. இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள், ஒரு மொபட், திருடப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் தப்பி ஓடிய பிரகாஷை போலீசார் தேடி வருகின்றனர். நள்ளிரவில் மில்லில் திருடிய கும்பலைப் பொதுமக்களே சுற்றி வளைத்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Erode police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe