ADVERTISEMENT

மருத்துவர்கள் அலட்சியம்... விசைத்தறி தொழிலாளி பலி!!!

09:07 PM Apr 19, 2020 | Anonymous (not verified)


ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளிக்காததால் கூலித் தொழிலாளி ஒருவர் இறந்துவிட்டதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ADVERTISEMENT


ADVERTISEMENT


அந்தியூர் சின்ன மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (38). வயதான இவர் விசைத்தறி தொழிலாளி. கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை பழனிச்சாமிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதுகுறித்து அவரது மனைவி அருள்செல்வி மற்றும் அண்ணன் முருகேசனிடம் கூறியுள்ளார். உடனடியாக முருகேசனும் அவரது மகனும் இருசக்கர வாகனத்தில் பழனிச்சாமியை அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மருத்துவமனையில் இருந்த இரண்டு செவிலியர்களிடம் தகவல் கூறியுள்ளனர். அவர்களிடம் நெஞ்சு வலியால் துடித்த பழனிச்சாமிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளனர். அதற்குச் செவிலியர்கள் மருத்துவர்கள் இல்லை எனக் கூறியுள்ளனர். மேலும் தொலைபேசி மூலம் மருத்துவர்களை அழைத்துள்ளனர். எந்த மருத்துவரும் வரவில்லை. வேறு வழி இல்லாமல் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


அங்குப் பரிசோதித்த மருத்துவர் உடனடியாக மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்று கூறியுள்ளார். அந்தியூர் அரசு மருத்துவமனை பகுதியில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதால், ஊரைச் சுற்றி மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அங்குப் பழனிச்சாமியைக் கொண்டு சென்றபோது பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்துவிட்டார் என்று கூறியுள்ளார். அந்தியூர் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் பணி நேரத்தில் இல்லாததால் தான் பழனிச்சாமி இறந்தார் எனக் கூறி 30-க்கும் மேற்பட்ட உறவினர்கள் அரசு மருத்துவமனையில் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு அரசு மருத்துவர் கவிதாவிடம் இது குறித்து முறையிட்டனர்.

கரோனா பிரச்சனையால் பொது மருத்துவம் கூட பார்க்க முடியாதா எனவும் முதலுதவி சிகிச்சை அளித்திருந்தால் பழனிச்சாமி பிழைத்திருத்திருப்பார் எனவும் உறவினர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். அரை மணி நேரம் நீடித்த முற்றுகை போராட்டத்திற்குப் பின் அந்தியூர் காவல் நிலையத்தில் பணியில் இருந்த டாக்டர் மீது புகார் தெரிவிக்க உறவினர்கள் சென்றனர்.

இறந்த பழனிச்சாமியின் சகோதரர் முருகேசன் நம்மிடம் கூறும்போது, "நாங்கள் வந்த போதே முதலுதவி சிகிச்சை அளித்து இருந்தால் என் தம்பியைக் காப்பாற்றி இருக்க முடியும். கரோனா பிரச்சனையால் பொது மருத்துவச் சிகிச்சையை தனியார் மருத்துவமனை மட்டுமல்ல அரசு மருத்துவமனையும் சிகிச்சையளிப்பதில்லை. சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

கரோனா வைரஸ் தடுப்பு போரில் உயிரைக் கொடுத்து போராடி வருகிறார்கள் அர்பணிப்புள்ள மருத்துவர்கள். இந்தச் சமயத்திலேயும் பணி நேரத்தில் மருத்துவமனையில் இல்லாமல் உயிர்களைக் காப்பாற்றுவதில் அலட்சியமாகச் செயல்படும் அரசு மருத்துவர்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT