
மறைந்த முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கலைஞரின் 98வது பிறந்த நாள் ஜூன் 3 வியாழக்கிழமையன்று தமிழகம் முழுக்க தி.மு.க முன்னணி நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை கலைஞர் படத்திற்கு மாலை மரியாதை செய்து பொது மக்களுக்கு பல்வேறு வகையான உதவிப் பொருட்கள் வழங்கினார்கள்.
சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலைஞர் நினைவிடத்தில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தப்பட்டதோடு மக்களுக்கு உதவிப் பொருட்கள், அரசின் சார்பில் புதிய பல அறிவுப்புக்கள் வெளியிடப்பட்டது. ஈரோட்டில் தி.மு.க. துணை பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது இல்லத்தில் கலைஞர் திருவுருவ படத்திற்கு விளக்கேற்றி மலர் மரியாதை செலுத்தினார்.
அதே போல் ஈரோடு தெற்கு மா.செ. வும் அமைச்சருமான சு.முத்துச்சாமி தி.மு.க. கட்சி அலுவலகத்தில் உள்ள கலைஞர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட அவை தலைவர் குமார் முருகேஷ், மாவட்ட துணை செயலாளர் ஆ.செந்தில்குமார், பொருளாளர் பி.கே.பழனிச்சாமி, மாவட்ட பிரதிநிதி குமாரசாமி மாநகர செயலாளர் சுப்பிரமணி இளைஞர் அணி அமைப்பாளர் பிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் மாவட்டம் முழுக்க முதியோர் இல்லம், அனாதை இல்லம் மாற்று திறனாளிகளுக்கு உதவிப் பொருட்கள் வழங்கினார்கள்.
தி.மு.க. ஆட்சி பொறுப்பில் உள்ள நிலையில் மறைந்த தலைவர் கலைஞரின் 98 வது பிறந்த நாளை முன்னிட்டு கலைஞரின் பெருமைகளையும் புகழழையும் மக்கள் மனதில் பதிய வைத்தார்கள் தி.மு.க. தொன்டர்கள்.