/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/peoples 2233.jpg)
குடி போதையால் பாதை மாறி பைத்தியம் பிடித்த ஒரு இளைஞர்,போதை ஏற்ற பணம் இல்லாமல் கொலையாளியாக மாறிய கொடூரம் ஈரோட்டில் நிகழ்ந்துள்ளது.
ஈரோடு மாவட்டம், அவல் பூந்துறை என்ற கிராமத்தில் பாரதி வீதியைச் சேர்ந்தவர்முத்துசாமி. இவரது மனைவி ஜெல்லின் மேரி. இவர்களுக்கு பாரதி வெண்ணிலா என்ற மகளும் பூவிழி செல்வன் என்ற மகனும் உள்ளனர். மகள் பாரதி வெண்ணிலாவுக்கு திருமணமாகி அடுத்த வீதியில் வாடகைக்கு ஒரு வீட்டில் தனது கணவருடன் வசித்து வருகிறார். பூவிழி செல்வனுக்கும் ஷர்மிளா என்ற மனைவியும், அக்ஷதா என்ற குழந்தையும் உள்ளனர்.
போதைக்கு அடிமையான பூவிழி செல்வன் முறையாக வேலைக்குச் செல்லாமல் குடும்பத்தினரிடம் குடிப்பதற்குப் பணம் கேட்டு தொடர்ந்து பிரச்சனையில் ஈடுபட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் குடி போதைக்கு அடிமையாகி மனநலம் பாதிக்கப்படவே, அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்துள்ளார். மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்த பிறகும் குடிப்பதற்குப் பணம் கேட்டு மனைவியிடம் தகராறு செய்ய, சில தினங்களுக்கு முன்பு அவரது மனைவி ஷர்மிளா குழந்தையுடன் கோவையில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 12- ஆம் தேதி பூவிழிசெல்வன் கோவையில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு மது போதையில் சென்றுள்ளார். அங்கு மாமனார், மாமியார் மற்றும் மனைவியுடன் சண்டை போட அவர்கள் பூவிழி செல்வனை அடித்துவிரட்டியுள்ளனர். பிறகு, கோவையிலிருந்து ஈரோடு வந்து அவல்பூந்துறையில் உள்ள தனது வீட்டிற்கு நள்ளிரவு வந்துள்ளார்.
அங்கு வீட்டில் இருந்த தனது தாய் ஜெலின்மேரியிடம், 'மதுகுடித்தே தீர வேண்டும், பணம் கொடு' எனத் தொடர்ந்து டார்ச்சர் செய்ய, பணம் தர மறுத்த அவரது தாய் திடீரென வீட்டை விட்டு வெளியே போய் விட்டார். இதனால் செய்வதறியாது கடும் ஆத்திரமடைந்த பூவிழி செல்வன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 95 வயதான தனது பாட்டி காளியம்மாளை எழுப்பி பணம் கேட்டுள்ளார். அந்த வயதான பாட்டி பேசக் கூட முடியாமல் சைகையால் இல்லையென்று கூறியிருக்கிறார்.
எப்படியாவது மதுவைக் குடிக்க வேண்டும் என்ற வெறியில்அந்த நபர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்துவந்து வயதான பாட்டி என்றும் பாராமல் வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பாட்டி காளியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த கொடூரச் செயல் அக்கம் பக்கத்தினருக்குத் தெரியவர காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். அரச்சலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, காளியம்மாளின் உடலைக் கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போதையில் அங்கேயே இருந்த பூவிழி செல்வனை கைது செய்தனர்.
குடிப்பதற்காக அந்த நேரத்தில் பணம் வேண்டும் அதற்காக எப்படிப்பட்ட செயலையும் போதைக்கு அடிமையான மனித மிருகம் செய்யும் என்பதற்கு இச்சம்பவமும் ஒரு உதாரணம்!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)