Skip to main content

“அரசே எங்களை கருணை கொலை செய்யட்டும்..” -  மனமுடைந்த தம்பதி பரபரப்பு புகார்..!

Published on 11/02/2021 | Edited on 11/02/2021

 

erode district office family gave petition

 

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று (10 பிப்.) கோபிசெட்டிபாளையம் தொகுதி எரங்காட்டூர், காடையம்பாளையம் பகுதியில் உள்ள பத்மா நகரைச் சேர்ந்த சீனிவாசன், அவரது மனைவி மற்றும் அவரின் இரண்டு பெண் குழந்தைகளுடன் வந்து அதிகாரிகளிடம் மனு ஒன்றை கொடுத்தனர்.

 

பிறகு சீனிவாசனின் மனைவி செய்தியாளர்களிடம் கூறும்போது, "நாங்கள் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டோம். என் கணவர் மீது ஏற்கனவே இரண்டு பொய்யான வழக்குகள் காவல்துறையினர் பதிவு செய்தனர். அதோடு எங்களது காரையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நாங்கள் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

 

இந்த நிலையில், என் கணவர் மீது போடப்பட்ட இரண்டு வழக்குகளிலிருந்தும் அவர் விடுதலை ஆகிவிட்டார். ஆனால், அதன் பிறகு இவர் பழைய குற்றவாளி என வேண்டுமென்றே போலீசார் இரவு நேரங்களில் எங்கள் வீட்டுக்கு வந்து அச்சுறுத்தி வருகின்றனர். நாங்கள் பார்யூர், நஞ்சகவுண்டன்பாளையம் பகுதியில் மூன்று வருடமாக வாடகைக்கு சிறிய மளிகை கடை வைத்து நடத்திவருகிறோம். 

 

கடந்த 4ஆம் தேதி, திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர் காவல் நிலையத்தில் இருந்து வந்த போலீஸார் சிலர், எனது கணவரை அடித்து இழுத்துச் சென்று விட்டனர். அவரை காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லாமல் தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்து துன்புறுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் கடை மற்றும் வீட்டு உரிமையாளர்கள் எங்களைக் காலி செய்யச் சொன்னார்கள். 

 

இப்போது எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, நாங்கள் இரு பெண் குழந்தைகளுடன் நடுத் தெருவில் நிற்கிறோம். காவல்துறையினர் தொடர்ந்து இவ்வாறு செய்து வருவதால் எங்கள் குடும்பம் பெரும் மன உளைச்சலில் உள்ளது. எனது கணவர் பெயரை காவல்துறையினரால் பராமரிக்கப்படும் சரித்திர பதிவேடு மற்றும் பழையக் குற்றவாளி பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

 

அப்போதுதான் போலீஸ் தொல்லை இல்லாமல் இருக்கும். பழையக் குற்றவாளி என்று வைத்துக் கொண்டாலும், திருந்தி வாழ்வது தவறா? வேண்டுமானால் எங்களை அரசே கருணை கொலை செய்ய வேண்டுகிறோம். அப்படி இல்லையென்றால் நாங்கள் குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு எங்களுக்கு வழியே இல்லை" என்றார்.

 

சார்ந்த செய்திகள்