Advertisment

ஈரோட்டில் கனமழை; பொதுமக்கள் கடும் அவதி

erode district fully heavy rain last two days

Advertisment

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வந்தது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், குழந்தைகள் கடும் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் இடியுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் கவுந்தப்பாடி பகுதியில் 60 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. அங்குள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கோபி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்த கனமழையால் மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.மாவட்டம் முழுவதும் பெய்த இந்த திடீர் கோடை மழையால் வெப்பம் தணிந்தது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று 2வது நாளாக இரவு முழுவதும் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக ஈரோடு புறநகர் மாவட்டம் முழுவதும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. ஈரோடு மாநகர பகுதியில் நேற்று காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் இருந்தது. ஆனால் இரவு 11 மணிக்கு பிறகு மழை பெய்யத்தொடங்கியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக எலந்தகுட்டைமேடு பகுதியில் 94.40 மி.மீ மழை பதிவாகி உள்ளது. இதைப்போல் தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் நேற்று 2வது நாளாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது. காட்டாற்று வெள்ளமும் ஏற்பட்டது. பவானிசாகர் பகுதியில் நேற்று இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தது. இதைப்போல் கொடிவேரி அணை, சத்தியமங்கலம், நம்பியூர், குண்டேரிப்பள்ளம், கோபி, வறட்டுப்பள்ளம், பெருந்துறை போன்ற பகுதிகளிலும் விடிய விடிய இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கடந்த இரண்டு நாட்களாக மாவட்டத்தில் உள்ள அணை பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

நம்பியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக நம்பியூர் அடுத்த கரட்டுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட வெங்கம் மேட்டுபுதூர் பகுதியில் உள்ள 20 வீடுகளில் மழைநீர் புகுந்தது. இரவு நேரத்தில் மழை நீர் புகுந்ததால் இந்த வீட்டைச் சேர்ந்த மக்கள் கடும் அவதி அடைந்தனர். மேலும் மழை தண்ணீரில் பாம்பு, பூரான், தேள் போன்ற விஷப் பூச்சிகள் வீட்டுக்குள் வந்தன. இதனால் விடிய விடிய தூங்காமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். காலை மழைநீர் வடியத்துவங்கியதால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

Advertisment

இந்தப் பகுதியில் போதிய வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் வெளியேறாமல் அந்தப் பகுதியிலேயே தேங்கி நின்றது. இதன் காரணமாக அந்தப் பகுதியில் 20 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழை, கரும்பு, மக்காச்சோளம், பருத்தி போன்ற பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் லட்சக்கணக்கில் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. மழைக்காலங்களில் இது போன்று தொடர்ந்து அவதிப்பட்டு வருவதால் இந்த பகுதியில் போதிய வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதே போல் சத்தியமங்கலம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வனப்பகுதி முழுவதும் ரம்மியமான காட்சி அளித்து வருகிறது.ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:எலந்தகுட்டை மேடு - 94.40, தாளவாடி - 87, பவானிசாகர் - 79, கொடிவேரி அணை - 73, சத்தியமங்கலம் - 65, நம்பியூர் - 63, குண்டேரி பள்ளம் - 60, கோபி - 47.20, வரட்டு பள்ளம் - 16, ஈரோடு- 12, பெருந்துறை - 5, கவுந்தப்பாடி- 2.40. மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

rain Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe