Skip to main content

ஒருவர் மூலம் 13 பேருக்கு கரோனா... -ஈரோடு அதிர்ச்சி

Published on 30/06/2020 | Edited on 30/06/2020
erode corona virus issue

 

ஈரோடு மாவட்டத்தில் சென்ற சில நாட்களாக கரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. குறிப்பாக ஈரோடு மாநகர் பகுதியில் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை இதுவரை 136 ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் மாநகராட்சியுடன் இணைந்து இதனை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  


ஏற்கனவே நோய் கண்டறியப்பட்ட இடத்தில் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளன. மேலும் மாவட்டம் முழுவதும் பிசிஆர் சோதனை அதிகப் படுத்தப்பட்டுள்ளது. தினமும் 1100க்கும் மேற்பட்ட சோதனைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வைராபாளையத்தை சேர்ந்த    ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவரது வீட்டில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அந்த நபர் பிபி அக்ரகாரத்தில் உள்ள ஒரு டையிங் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.  


இதையடுத்து சுகாதாரத்துறை பணியாளர்கள் கடந்த வெள்ளிக்கிழமையன்று அந்த தொழிற்சாலைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் 56 தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. உடனடியாக அந்த தொழிற்சாலை மூடி சீல் வைக்கப்பட்டது. 56 தொழிலாளர்களுக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

 

பின்னர் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இதில் நேற்று இரவு அதில் 13  தொழிலாளர்களுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது. சுகாதாரப் பணியாளர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அந்த 13 தொழிலாளர்களையும் பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர்.  அந்த தொழிற்சாலை முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத் தப்பட்டது. 


இதேபோல்  ஈரோடு அசோகபுரத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு துணி நூல் பதனிடும் ஆலையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கரோனோ பாதிக்கப்பட்ட உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் துணி பதனிடும் நூல் ஆலையில் பணிபுரியும் 400 க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு மாநகராட்சியின் சார்பில் கரோனோ பரிசோதனை முகாம் நடைபெற்றது.

 

இதில் மாவட்ட ஆட்சியர் கதிரவன், மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு கரோனோ பரிசோதனை குறித்து ஆய்வு செய்தனர். ஒருவர் மூலம் 13 பேருக்கு கொரோனா பரவியது ஈரோடு மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்