Skip to main content

தாய்லாந்து நபர்களுக்கு ரம்ஜான் நோம்பு வசதி... -ஈரோடு போலீஸ் ஏற்பாடு

Published on 27/04/2020 | Edited on 27/04/2020
erode



தாய்லாந்து நாட்டில் இருந்து 7 பேர் கொண்ட குழுவினர் சுற்றுலா விசாவில் சென்ற மாதம் 11ம் தேதி மத வழிபாடு மற்றும் பிரசங்கத்திற்காக ஈரோடு வந்தனர். அவர்கள் ஈரோடு கொல்லம்பாளையம், சுல்தான்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள மசூதியில் தங்கி மதபிரசங்கம் செய்து வந்தனர். இதில் 2 பேர் ஈரோட்டில் இருந்து மீண்டும் தாய்லாந்து செல்வதற்காக சென்ற 16ம் தேதி கோவை விமான நிலையம் சென்றனர். அப்போது இருவரையும் அங்கு இருந்த டாக்டர்கள் குழுவினர் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என சோதனை நடத்தி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். 


அதில் ஒருவர் சிறுநீரக பாதிப்பு காரணமாக இறந்தார். மீதமுள்ள 6 பேருக்கும் கரோனா தொற்று இருக்கலாம் என கருதப்பட்டு பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் 3 நபர்களுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. மீதமிருந்த 3 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் இருந்து வந்தனர். தற்போது தாய்லாந்து நாட்டினர் 6 பேரும் குணமடைந்துள்ளனர். இவர்களுக்கு மீண்டும் கரோனா பரிசோதனை செய்தபோது, கரோனா நெகட்டிவ் என வந்துள்ளது.

ஆனால், தாய்லாந்து நாட்டினர் 6 பேரும் ஈரோடு நகர பகுதியில் கரோனா பரப்பியதாகவும், சுற்றுலா விசாவில் இந்தியா வந்து, விதியை மீறி மத பிரசங்கத்தில் ஈடுபட்டது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஈரோடு போலீசார் வழக்கு பதிவு செய்து, வீடியோ கான்பரன்சிங் மூலம் மருத்துவமனையிலேயே 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

தாய்லாந்து நாட்டின் நீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த 23ம் தேதி வரை காவலில் வைக்கவும், இவர்களுக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து ஹைகோர்ட் 30ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டது. இந்நிலையில், கடந்த 24ம் தேதி தாய்லாந்து நாட்டினர் 6 பேரும் ஜாமீன் மனு ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. மருத்துவ கண்காணிப்பில் உள்ள தாய்லாந்து நாட்டினர் தாங்கள் 6 பேரும், ரம்ஜான் நோன்பு இருப்பதற்கு தேவையான வசதிகள் செய்து தர வேண்டும் என மாவட்ட காவல் துறையிடம் அனுமதி கேட்டிருந்தனர். இதனை ஏற்று தாய்லாந்து நாட்டினர் நோன்பு இருக்க தேவையான உணவு வகைகள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.

இதுகுறித்து ஈரோடு எஸ்.பி. சக்திகணேசன் கூறும்போது, தாய்லாந்து நாட்டினர் 6 பேருக்கும் கரோனா நோயில் இருந்து குணமடைந்து விட்டனர். ஆனால், அவர்கள் சுற்றுலா விசாவில் வந்து மத பிரசங்கத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காகவும், நோய் பரப்பியதாகவும் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்போது, அவர்கள் மருத்துவ கண்காணிப்பில் பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளனர். 

இவர்களை சென்னை புழல் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த 6 பேரும் ரம்ஜான் நோன்பு இருப்பதற்காக தேவையான உணவுகள் மருத்துவமனையிலேயே வழங்கப்பட்டது. அதேபோல், அவர்கள் நோன்பு முடிப்பதற்கும் மாலையில் உணவுகள் வழங்கப்பட்டது. இதேபோல், அவர்கள் ஈரோட்டில் இருக்கும் வரை நோன்பு இருக்க தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்" என்றார். 

கரோனா கொடிய வைரஸாக ஒரு புறம் இருந்தாலும் அவரவர்களின் மத மற்றும் வழிபாடு நம்பிக்கைகளுக்கும் இருக்கும் இடத்திலேயே வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது பாராட்டப்பட வேண்டியதுதான்.

 


 

சார்ந்த செய்திகள்