Skip to main content

கரோனாவிலிருந்து தன்னை தற்காத்துக்கொண்ட ஈரோடு! விரைவில் பச்சை மண்டலமாக மாறும் என்று ஆட்சியர் தகவல்!

Published on 01/05/2020 | Edited on 01/05/2020

 

Erode - corona virus

 

கரோனா வைரஸ் பிடியிலிருந்து தமிழகத்திலேயே முதன்முதலாக தன்னை தற்காத்துக் கொண்டது ஈரோடு. இங்கு இந்த வைரஸ் தொற்று பரவிய 70 பேரில் ஒருவர் இறப்பு தவிர மற்ற 69 பேரும் பூரண நலம் பெற்று அவரவர்கள்  வீடுகளுக்கு இரண்டு நாள்களுக்கு முன்பே அனுப்பப்பட்டு விட்டனர். இதன் தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டம் கரோனா வைரஸ் இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த வைரஸ் தாக்கம் உள்ள மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாக இருக்கும் நிலையில், ஈரோடு மாவட்டம் ஆரஞ்சு மண்டலமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.


இந்த நிலையில் இன்று கோபிசெட்டிபாளையத்தில் நடந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சிறப்பு கடன் வழங்கும் திட்ட விழாவில் அமைச்சர் செங்கோட்டையன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் உட்பட ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவனும் கலந்துகொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "ஈரோட்டில் கரோனா வைரஸ் முற்றிலுமாக விரட்டப்பட்டுள்ளது. இதற்காக அர்ப்பணிப்போடு 24 மணி நேரமும் மருத்துவர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பங்குபெற்றனர். எனவே எல்லோருக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்போது ஈரோடு மாவட்டம் ஆரஞ்சு மண்டலமாக அரசு அறிவித்திருக்கிறது. இன்னும் சில நாள்களில் ஈரோடு மாவட்டம் பச்சை மண்டலமாக அறிவிக்க இருக்கிறது. காரணம் வைரஸ் இங்கு முழுமையாக இல்லை என்ற நிலை தான்"  என கூறினார். இதன் அடிப்படையில் பச்சை மண்டலமாக ஈரோடு அறிவிக்கப்பட்டால் தடைகள் இல்லாமல், பெருமளவு தளர்வுகள் செய்யப்படும். அதன் மூலம்  மக்களின் இயல்பு வாழ்க்கை தொடங்கும் என மக்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்