ADVERTISEMENT

எச்சில் துப்பிய 12 பேருக்கு தலா ஐநூறு...! -ஈரோட்டில் ஃபைன் பரபரப்பு!

07:21 PM Sep 18, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொடர்ந்து வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக ஈரோடு மாநகர்ப் பகுதியில்தான் இதன் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. மாவட்டத்தின் மொத்த பாதிப்புகளில் 60 சதவீதம் பேர் ஈரோட்டைச் சேர்ந்தவர்கள் தான். இதனால் மாவட்ட நிர்வாகம் ஈரோடு மாநகராட்சியுடன் இணைந்து பல்வேறு தடுப்பு நிலையை எடுத்து வருகிறது. மக்கள் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது.

முதலில் முகக் கவசம் அணியாமல் வருபவர்களுக்கு 100 ரூபாய் அபராதமும், அதைத் தொடர்ந்து இரண்டாம் முறை வருபவர்களுக்கு 200 ரூபாயும், மூன்றாவது முறையும் முகக் கவசம் இல்லாமல் தென்பட்டால், 'கைது' நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. இதற்காக மாநகராட்சி சார்பில் 4 மண்டலங்களிலும் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு முகக் கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

குறிப்பாக பெண்கள் அதிக அளவில் முகக் கவசம் அணியாமல் செல்கிறார்கள். இதனால் இப்போது அபராதம் இருநூறு ரூபாயாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது இடங்களில் எச்சில் துப்புபவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதேபோல் கடைகளில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இருந்தால், அந்த கடைக்காரருக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

மாநகராட்சி அலுவலர்கள் மட்டுமே அபராதம் வசூலித்து வந்த நிலையில் இப்போது மாநகராட்சி பணியாளர்களுடன் சுகாதாரப் பணியாளர்கள், வருவாய்த் துறையினர் மற்றும் போலீஸ் அதிகாரிகளும் அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஈரோட்டில் 17 ஆம் தேதி பொது இடங்களில் எச்சில் துப்பியதாக 4 நபர்களுக்கு தலா 500 ரூபாய் அபராதம் முதன்முறையாக விதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்றும் பேருந்து நிலையம், வ.உ.சி.காய்கறி மார்க்கெட், நாச்சியப்பா வீதி உட்பட சில இடங்களில், சாலையில் எச்சில் துப்பிய மேலும் 8 பேருக்கு தலா 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இவ்வாறாக 12 நபர்களுக்கு 500 அபராதம் விதிக்கப்பட்டது. எச்சில் துப்பியதற்காக ஐநூறு ரூபாயா? என ஃபைன் கட்டியவர்கள் மிரண்டு போன பரபரப்பு சம்பவங்களும் ஏற்பட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT