தங்கள் மகள் நல்ல கல்வி கற்று உயர்நிலைக்கு வர வேண்டும் என்ற கனவுகளோடு உயர் கல்விக்காக பல ஊர்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு அலைந்து திரிந்து ஒரு வழியாக இந்த கல்லூரி நல்ல கல்லூரி என நம்பி ஏதாவது ஒரு கல்லூரியில் மகளை சேர்த்து அங்கேயே உள்ள விடுதியில் தங்கி படிக்க வைக்கிறார்கள் பெற்றோர்கள்.

erode incident

Advertisment

அப்படித்தான் ஆயிரம் கனவுகளோடு மாணவி பாத்திமாவை சென்னை ஐ.ஐ.டி.யில் சேர்த்து படிக்க வைத்தார்கள் கேரளாவைச் சேர்ந்த அவரின் பெற்றோர்கள். ஆனால் ஏதோ ஒரு விபரீத்தில் பலியாகி மாணவி பாத்திமா சடலமாகத் தான் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டாள்.

அந்த வரிசையில் இப்போது நாமக்கல் மாணவியும் "திடீர் வலிப்பு" என்ற பெயரில் இறந்துள்ளார்.

Advertisment

நாமக்கல் மாவட்டம் அன்பு நகரைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மகள் 19 வயது சாதனா. ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு பயோ மெடிக்கல் படித்து வந்தார். மாணவி சாதனா அந்த கல்லூரியின் விடுதியிலேயே தங்கி படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் மாணவிக்கு திடீரென உடல் நிலை சரியில்லாமல் போனதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து விடுதியில் தங்கி இருந்த மற்ற மாணவிகள் விடுதி காப்பாளருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அந்த மாணவி சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த அந்த மாணவியை அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அந்த மாணவி இறந்து விட்டதாக தெரிவித்தனர். நள்ளிரவில் திடீரென வலிப்பு ஏற்பட்டதாகவும், சிகிச்சை பலனலிக்காமல் அவர் இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

மாணவி இறப்புக்கு வலிப்பு தான் காரணமா, அல்லது தற்கொலையா? வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பது உடனே தெரியவில்லை. இவை குறித்து ஈரோடு டவுன் டி.எஸ்.பி. ராஜு மற்றும் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.