erode collector office

கரோனா வைரஸ் தடுப்புப்பணியில் தமிழகத்திற்கே முன்னுதாரணமாகத் திகழ்ந்த ஈரோடு மாவட்டம் இன்றுடன் இந்த வைரஸ் தொற்று இல்லாதவர்கள் என 29 நாட்களைக் கடந்துள்ளது. எனவே ஈரோடு பச்சை மண்டலமாக மாறி இருக்கும் இந்தச் சூழலில் மீண்டும் ஏதாவது ஒரு நிலையில் வைரஸ் தொற்று ஈரோட்டுக்கு ஊடுருவி விடக்கூடாது என மாவட்ட ஆட்சியர் கதிரவன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசனும் இணைந்து களப்பணி ஆற்றி வருகிறார்கள்.

Advertisment

Advertisment

இந்த நிலையில் தமிழக அரசு சில விதிமுறைகளுக்கு உட்பட்டுத் தொழில் நிறுவனங்கள், கடைகளைத் திறக்கலாம் என அறிவித்த நிலையில் அவை முழுமையாக அந்தத் தொழில் நிறுவனங்கள் கடைபிடிக்கிறதா? என இன்று காலையில் இருந்து ஈரோட்டில் மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி. ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார்கள்.

அதில் பிரபலமான நகை கடையான தனிஷ்க் மற்றும் ஆலன் சோலி ஷோரூம் ஆகியவை குளிர்சாதன வசதியுடன் இயங்கி வந்தன. இதை நேரில் ஆய்வு செய்த கலெக்டர் மற்றும் எஸ்பி ஆகியோர் உடனடியாக இந்த இரு கடைகளையும் பூட்டி சீல் வைத்துள்ளார்கள். சாதாரணமாக தெருவோரத்தில் வயிற்றுப் பிழைப்புக்காக கடை நடத்துவோர் செய்யும் விதிமுறைகள் கூட இந்தப் பிரபலமான கம்பெனிகள் செய்யாமல் வருமானத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்து இயங்குவது சட்டப்படி தவறுதான் எனக் கூறப்படுகிறது.

இதுபற்றி ஈரோடு மக்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் பேசும்போது, "எங்கே அரசு விதிமுறைகளை மீறி நடந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது உயர் அதிகாரிகளின் கடமை. அதனைச் சரியாகச் செய்திருக்கிறார் கலெக்டர்'' என்று பாராட்டுகிறார்கள்.