ஈரோட்டில் சென்னிமலை சாலை விவேகானந்தா நகரைச் சேர்ந்தவர் 79 வயதான மூதாட்டி ஜோகராம்மாள். இவர் தனது மகன் சாதிக்பாஷா, பேரன் பீர்முகமதுவுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். மருமகள் ஏற்கனவே இறந்து விட்டார். மகன் சாதிக்பாஷா விசைத்தறிப்பட்டறையில் வேலை செய்து வந்தார். பேரன் பீர்முகமது வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார். பீர்முகமதுக்கு சென்ற ஐந்தாண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஆனால் கணவன் மனைவி கருத்து வேறுபாட்டால் அவரது மனைவி பீர் முகமதுவை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

erode

Advertisment

பீர்முகமதுக்கு அதிக குடிப்பழக்கம் இருந்துள்ளது. அடிக்கடி குடித்து விட்டு வீட்டுக்கு வந்து பாட்டியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். அதைப் போலவே இன்று அதிகாலை 2 மணி அளவில் குடிபோதை உடன் பீர்முகமது வீட்டுக்கு வந்துள்ளார். சாதிக் பாட்ஷா தறிப் பட்டறைக்கு வேலைக்கு சென்று விட்டார். பாட்டி ஜோகராம்மாளுடன் ஏதோ கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். பாட்டி எதுவும் பேசாமல் படுத்திருக்க தலைக்கேறிய போதையில் ஆத்திரமடைந்த பீர்முகமது வீட்டில் இருந்த டி.வி.யை எடுத்து ஜோகராம்மாள் தலையில் போட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அந்த மூதாட்டி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

Advertisment

சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு வந்து பார்த்த போது ஜோகராம்மாள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். டவுன் டிஎஸ்பி ராஜு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜோகராம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக ஈரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளி பீர்முகமதை கைது செய்தனர். குடிபோதையால் வந்த விபரீதம் ஒரு மூதாட்டி உயிரை பறித்துள்ளது. பேரனே பாட்டி தலையில் டிவியை போட்டு கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.