Skip to main content

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; கால்நடை வியாபாரிகளுக்கு ரசீது அறிமுகம் 

Published on 03/02/2023 | Edited on 03/02/2023

 

erode by election introduced receipt in livestock market

 

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை மாட்டுச் சந்தை கூடும். மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா போன்ற வெளி மாநிலங்களிலிருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து இங்கு விற்பனைக்காக கொண்டு வரும் மாடுகளை வாங்கிச் செல்வார்கள். ஒவ்வொரு வாரமும் ரூபாய் 5 கோடி முதல் 8 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறும்.

 

தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை நடைபெறும் இடம் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குள் இருப்பதால் அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி ரூபாய் 50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணங்களை தேர்தல் கண்காணிப்பு குழுவினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். இதன் காரணமாக மாட்டுச் சந்தைக்கு கடந்த வாரம் வெளிமாநில வியாபாரிகள் குறைந்த அளவே வந்திருந்தனர். ஒரு மாட்டு வியாபாரி வேறு மாநிலத்திலிருந்து வரும்போது குறைந்தது 1 லட்சம் முதல் 5 லட்சம் வரை கொண்டு வந்து பத்து முதல் இருபது மாடுகளை மொத்தமாக வாங்கிச் செல்வார்கள். தேர்தல் நடத்தை விதிமுறைகளால் கொண்டு செல்லும் பணத்தை பறக்கும் படையினர் பறித்து விடுவார்கள் என மாட்டு வியாபாரிகள் சந்தைக்கு வருவதை தவிர்த்தனர்.

 

இதனையடுத்து மாட்டுச் சந்தை நிர்வாகம் சார்பில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகளுக்கு தனியாக ரசீது கொடுக்கப்பட்டு வருகிறது. நேற்று கூடிய மாட்டுச் சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வந்திருந்தனர். அவர்களுக்கு மாட்டுச் சந்தை சார்பில் ரசீது வழங்கப்பட்டது. அந்த ரசீதில் அவர்களது பெயர், முகவரி, ஆதார் கார்டு, கொண்டு செல்லும் தொகை, தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தது. வியாபாரிகள் மாடுகளை வாங்கிக் கொண்டு திரும்பிச் செல்லும்போது தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தால் இந்த ரசீதை காண்பித்து செல்கின்றனர். தற்போது கூடிய மாட்டுச் சந்தையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள், எருமைகள், கன்றுகள் என விற்பனைக்கு வந்தவற்றை வியாபாரிகள் வாங்கிச் சென்றார்கள். இதைப்போல் வெளிமாநிலத்தில் இருந்து வரும் வியாபாரிகள் இங்கேயே பணம் எடுக்கும் வகையில் நடமாடும் ஏடிஎம் மையம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய கூட்டுறவு வங்கி சார்பிலும் தனியார் வங்கி சார்பிலும் நடமாடும் ஏடிஎம் வாகனங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.