கடவுள் வந்து கேட்கவா போகிறார் என்ற தைரியத்தில் அதிகாரிகள் கொள்ளையடிக்கிறார்கள் அது வெட்ட வெளிச்சமாக வெளியே தெரிந்தும் உயரதிகாரிகள் ஊழல் பேர்வழிகளைக் காப்பாற்றுகிறார்கள் என வேதனையோடு கூறுகிறார்கள் ஈரோடு பாரதிய ஜனதா கட்சியினர்.

ஈரோடு மாவட்டம் வெங்கம்பூர் வரதராஜபெருமாள் கோவில் மற்றும் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில், நடந்த ஊழலால்அங்குள்ள செயல் அலுவலர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கு நடவடிக்கை கோரி ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ.கவினர் இன்று 150 -க்கும் மேற்பட்டோர் ஈரோடு கலெக்டர் அலுவலகம் வந்து அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.

Advertisment

பிறகு பா.ஜ.க, மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியன் பேசும்போது,

"வெங்கம்பூர் வரதராஜபெருமாள் வகையறா கோவில் மற்றும் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில்களில் உள்ளவர்கள்ஏறக்குறைய மூன்று கோடி ரூபாய்க்கு மேல் போலியான செலவுச்சீட்டு தயாரித்து கோவில் பணத்தை முழுமையாகக் கையாடல் செய்துள்ளனர். கோவில் செயல் அலுவலர் முத்துசாமி என்பவர் மீதான முறைகேடு குறித்து,இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர்கள் தலைமையில் விசாரணை நடக்கிறது. அவருக்கு அறநிலைய துறை ஈரோடு உதவி தணிக்கை அலுவலர் ராஜாராமன் இன்னும் சில அதிகாரிகள் உடந்தையாக அங்குள்ள ஆவணங்களை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஊழல் செய்த செயல் அலுவலர் மற்றும் பிறஅலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்து, கையாடல் செய்யப்பட்ட பணத்தை மீட்க வேண்டும். கோயில் பணத்தைக் கொள்ளையடிப்பவர்களை விட முடியாது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை தேவை. இம்முறைகேடு குறித்து, அறநிலையத்துறை உயர் அதிகாரிகளே ஒப்புதல் வழங்கியும், முறைகேட்டை மறைக்க பலரும் முயல்வது, இன்னும் சில முறைகேட்டை வெளிக்கொண்டு வராமல் தடுக்கும் செயலாகும்.

Advertisment

எனவே, இதுபற்றி, நேர்மையான உயர் அதிகாரிகளைக் கொண்டு விசாரிக்க வேண்டும். அதுவரை, குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களை மாற்றம் செய்து, தடையின்றி விசாரணை தொடர வழி செய்ய வேண்டும்"என்றார்.இதில் மாநில பிரச்சார அணிச் செயலாளர் சரவணன்உட்பட பலர் கலந்து கொண்டனர்.