/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/01 art img police siren 1_54.jpg)
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள செரையாம்பாளையத்தில் பவானி ஆறு செல்கிறது. இந்த ஆற்றில் நேற்று முன்தினம் மாலை ஒரு ஆணின் உடல் பகுதி மட்டும்மிதந்து வந்துள்ளது. அதில் அவரது தலை, கை, கால்கள் காணவில்லை. இது குறித்து பெருந்தலையூர் கிராம நிர்வாக அதிகாரி பஞ்சநாதன் கவுந்தப்பாடி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் பவானி ஆற்றுக்கு சென்று உடலை கைப்பற்றினார்கள். மேலும் உடல் கூறிய கை, கால்கள், தலை மிதக்கின்றனவா? என்று ஆற்றில் தேடிப் பார்த்தார்கள். ஆனால் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து உடலை மட்டும் மீட்டு பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று காலை கவுந்தப்பாடி அடுத்த மேற்கு குட்டிபாளையம் பகுதியில் பம்பிங் ஹவுஸ் அருகே தலை மிதப்பதாக கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று அந்த தலையை மீட்டனர். இதைப்போல் பெரிய மூலப்பாளையம் பகுதியில் மற்றொரு காலையும், ஆப்பக்கூடல் ஈஸ்வரன் கோவில் அருகே பவானி ஆற்றில் கைகளையும் மீட்டனர். பின்னர் மீட்கப்பட்ட தலை, கை கால்களை எடுத்துக் கொண்டு பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்து மீட்கப்பட்ட உடலோடு பொருத்திப் பார்த்தபோது அனைத்தும் பொருந்தியது. அந்த நபர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இறந்த நபருக்கு 35 வயது இருக்கும். இறந்த நபரின் தலையில் பலத்த வெட்டு காயம், கம்பியால் குத்திய காயங்கள் உள்ளன. இதன் மூலம் அந்த நபர் கொடூரமான முறையில் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்திக்கின்றனர்.
கொலை செய்யப்பட்ட நபர் யார்?எந்த ஊரைச் சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை. அவரை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட நபர் கவுந்தப்பாடி, கோபி, சத்தியமங்கலம் உட்பட்ட பகுதியில் இருப்பவராக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இந்த பகுதியில் மாயமானவர்கள் பட்டியல் குறித்து சேகரித்து வருகின்றனர். மேலும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் அனைத்தையும் ஆய்வு செய்து வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க கோபி டி.எஸ்.பி. சியாமளா தேவி தலைமையில் 4 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
Follow Us