
ஈரோட்டில் இருவேறு சம்பவங்களில் வடமாநிலத் தொழிலாளர்களைத் தாக்கியவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஈரோட்டில் மதுபானக் கடையில் ஏற்பட்ட தகராறில் பீகாரைச் சேர்ந்த சைலேந்தர் என்பவரை எட்டு பேர் கொண்ட கும்பல் தாக்கியுள்ளது. மேலும், அவர் வைத்திருந்த செல்போனையும் அந்தக் கும்பல் பறித்துச் சென்றுள்ளது. அதனைத் தொடர்ந்து சைலேந்தர், ஈரோடு காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். அவரது புகாரை ஏற்ற காவல்துறை, மதுபானக் கடையில் விசாரணை நடத்தி சைலேந்தரை தாக்கிய கும்பலை அடையாளம் கண்டது. இதில், ஈரோடு காவல்துறையினர் ஏழு பேரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவான ஒருவரை தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
இதேபோல், கோவையில் தங்கப்பட்டறையில் வேலை பார்த்து வரும் வடமாநிலத் தொழிலாளி ஒருவரை நேற்றிரவு இந்து முன்னணியைச் சேர்ந்த சூர்யபிரகாஷ், பிரகாஷ் மற்றும் இரண்டு கல்லூரி மாணவர்கள் ஆகியோர் தரக்குறைவாகப் பேசி அவரை தாக்கியுள்ளனர். இதுகுறித்து அவர் போலீஸில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரை ஏற்ற காவல்துறையினர் வடமாநிலத் தொழிலாளரை தாக்கிய இந்து முன்னணியைச் சேர்ந்த சூர்யபிரகாஷ், பிரகாஷ் மற்றும் இரண்டு கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்துள்ளனர்.