
ஈரோடு மாவட்டம், நம்பியூர் அதிமுக ஒன்றியச் செயலாளராக இருப்பவர் தம்பி என்கிற சுப்ரமணியம். இவர், அந்தப் பகுதியில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்ற பள்ளிக்குச் சென்று அங்கு வரிசையில் நின்ற மக்களிடமும் பணிபுரிந்த ஊழியர்களிடமும் தண்ணீர் மற்றும் பிஸ்கட் பாக்கெட் கொடுப்பதாகச் சொல்லி ஃபோட்டோவுக்குப் போஸ் கொடுத்து அதிக கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.
அப்போது அங்கிருந்த மக்களில் சிலர், ‘கரோனா வைரஸ் பரவாமல் இருக்க வேண்டும் என்பதற்குத்தான் தடுப்பூசி போடப்படுகிறது. இந்த நிலையில் இத்தனை கூட்டத்தைக் கொண்டுவந்து நீங்கள் கரோனா வைரஸைப் பரப்பலாமா’ என அவரிடம் கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு ஒன்றியச் செயலாளர் தம்பி என்கிற சுப்பிரமணி, வரிசையில் நின்ற மக்களையும் பணிபுரிந்த ஊழியர்களையும் சகட்டுமேனிக்குத் தகாத வார்த்தைகளில் திட்டத் தொடங்கினார். மேலும் “ஆட்சி இல்லை என்றாலும் நான் அதிகாரம் செய்வன்டா...” என திமிராக பேசியதோடு பலரையும் ஒருமையில் பேசி அந்த இடத்தில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்திருக்கிறார்.
எனவே அங்கிருந்தவர்கள் காவல் நிலையத்தை தொடர்புகொண்டு புகார் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவுசெய்த நம்பியூர் போலீசார், ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியத்தை கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோபிசெட்டிபாளையம் மாவட்டச் சிறையில் அடைத்தனர்.