EPs tweets about indian air force flight adventure program incident

இந்திய விமானப் படையின் 92ஆம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் இன்று (06.10.2024) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சாகச நிகழ்ச்சியில், விமானப்படையில் உள்ள பல்வேறு வகையான 72 விமானங்கள் சாகசங்களில் ஈடுபட்டன. இந்த விமான சாகச நிகழ்ச்சியை சுமார் 10 லட்சம் பேர் நேரில் கண்டுகளித்ததாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் மட்டும் சுமார் 4 லட்சம் பேர் விமான சாகசங்களைக் கண்டு களித்தனர். மெரினா சாலைகள், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் 5 லட்சம் பேர் வரை இருக்கலாம் எனத் தகவல் தெரிவிக்கப்படுகிறது. அதே சமயம் இந்த விமான சாகச நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட வெயிலின் தாக்கம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளதுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய பாதுகாப்புத் துறையின் முக்கிய அங்கங்களுள் ஒன்றான இந்திய விமானப் படையின் 92வது துவக்க நாள் விழாவை முன்னிட்டு, விமானப் படையின் தீரத்தைப் பறைசாற்றும் வண்ணம் சென்னையில் இன்று வான் சாகச நிகழ்ச்சி அரங்கேறியது. இதற்கான அறிவிப்பு முன்கூட்டியே வெளியான நிலையில், லட்சக்கணக்கான மக்கள் பார்வையிடக் கூடுவர் என்பது அறிந்து, போக்குவரத்து, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

EPs tweets about indian air force flight adventure program incident

Advertisment

இருப்பினும், இன்றைய நிகழ்ச்சியில் நிர்வாக ரீதியிலான ஏற்பாடுகளும், கூட்டத்தையும்- போக்குவரத்தையும் ஒழுங்கு படுத்துவதற்கு காவல்துறையினரும் போதிய அளவில் இல்லாததால், மக்கள் கடும் கூட்ட நெரிசலில் சிக்கி, குடிநீர் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டு, மேலும் வெயிலின் தாக்கத்தால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அளிக்கின்றன. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலும் வருத்தங்களும்.

இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வைக் கூட முறையாக ஒருங்கிணைக்கத் தவறிய நிர்வாகச் சீர்கேடே உருவான விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள். இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ராணுவ விமானப் படையின் தீரத்தைப் பறைசாற்றும் நிகழ்வுகள் இதுவரையில் சிறப்பாக நடைபெற்று வந்துள்ளன. ஆனால் இன்று தமிழகத்தில் நிகழ்பெற்ற நிகழ்வில் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது. இந்நிகழ்வுக்கு முறையான பாதுகாப்பு கொடுக்க தவறிய முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசுக்கு என் கடும் கண்டனங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.